இந்த வசனத்தை இதற்கு முன்பு நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையெனில், இந்த கட்டுரையைப் படித்த பின்பு போய் The Shawshank redemption படத்தை பார்த்துவிடவும். பத்து வயதுக்கும் குறைவான நான்கு சிறார்கள், அடர்ந்த அமேசான் காடுகளில் நாற்பது நாட்கள் தாக்குப்பிடித்து உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பது தான் இணையம் முழுக்க அனைவரும் படித்துக்கொண்டிருப்பது.
மே 1 ஆம் தேதி San Jose de Guaviare என்னும் நகரத்திலிருந்து Araracuara என்னும் இடத்திற்கு 33 வயதான அம்மாவுடன், அவர்களின் நான்கு குழந்தைகள் பயணப்படுகிறார்கள். நடுவானில் பறந்துகொண்டிருக்கும் போது, பைலட் இஞ்சின் ஃபெயிலியர் ஆனதைக் கண்டறிந்து 'MAY DAY' என அறிவித்துவிடுகிறார். ஆள் நடமாட்டமே இல்லாத அடர்ந்த காடுகளான Caquetá டிபார்ட்மென்ட்டில் விமானம் விழுந்துவிடுகிறது. இந்த இடம் கிட்டத்தட்ட San Jose de Guaviare-யில் இருந்து 175 கிமீ தள்ளி இருக்கிறது.
OPERATION HOPE என்னும் பெயரில் தேடுதல் வேட்டை தொடங்குகிறது. ஒரு வழியாக விமானம் விழுந்த இடத்தை கொலம்பியா ராணுவம் கண்டுபிடிக்கிறது. ஆனால், அந்த இடத்தில் மூன்று மனித உடல்கள் மட்டுமே இருக்க, அதிர்ச்சியடைகிறது தேடுதல் குழு. மூன்று உடல்களில் அந்த குழந்தைகளின் தாயாரும் அடக்கம். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை குழந்தைகளை எங்கேயும் காணவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த வானூர்தியைக் கண்டுபிடிக்கவே 14 நாள் ஆகியிருப்பதால், இதற்கு மேல் தேட வேண்டாமெனவும், தேடுதலை முடித்துக்கொள்ளலாம் என்றும் சிலர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், வானூர்தி விழுந்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில், குழந்தைகள் சாப்பிட்டு போட்ட பழங்களும், பயன்படுத்திய நாப்கின்களும் கிடைக்க, OPERATION HOPE குழுவுக்கு மீண்டும் தேடுவதற்கான உத்வேகம் கிடைத்தது.
ராணுவ குழுக்களாலும், வேட்டையாடும் விலங்குகளாலும் சூழப்பட்டிருக்கும் Caquetáவில் இந்தக் குழந்தைகள் ஒரு நாள் தாண்டுவதே கடினம் என்பதுதான் யதார்த்தம். ஆனால், இந்தக் குழந்தைகள் 14 நாட்கள் தாக்குப்பிடித்துவிட்டார்கள் என்பதால், எப்படியும் இவர்களைக் கண்டுபிடித்துவிட முடியும் என சிலர் நம்பியிருக்கிறார்கள். அதே சமயம், முட்கள் படர்ந்த அந்தக் காட்டில், மேலும் காயம் ஆகாமல் இருக்க, கால்களில் துணிகளைக் கட்டிக்கொண்டு இந்தக் குழந்தைகள் நகர ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் கால் தடத்தை கண்டுபிடிக்க இயலாமல் தேடுதல் இன்னும் கடினமாகியிருக்கிறது. தேடுதல் கைவிட்டுவிடலாம் என்பதற்கு அந்தக் குழு வைத்த காரணங்களில் முக்கியமானவை இரண்டு. குழந்தைகளின் குழுவில் மூத்தவருக்கு 13 வயதுதான், அடுத்தவருக்கு 9, அடுத்தவருக்கு 4, நான்காவது 11 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை. பல்வேறு குழுக்கள் வாழும் அந்த தேசத்தில், இந்த பழங்குடி குழந்தைகளுக்கு தெரிந்தது அவர்களின் தாய் மொழியான Huitoto மட்டும் தான்.
வைக்கோல்போரில் ஊசியைத் தேடுவது போல் கடினமானது என்னும் சொல்லாடலை நாம் கேட்டிருப்போம். ஆனால், இந்தக் குழந்தைகளைத் தேடுவது அதைவிடவும் கடினம். ஏனெனில் குழந்தைகள் ஊசியைப் போல் ஒரு இடத்தில் தேங்கிவிடவில்லை. அவர்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு பெரிய காட்டுக்குள், பறந்துகொண்டிருக்கும் சிறு வண்டை தேடிப்பிடிக்கும் சாகசத்திற்கு ஒப்பான செயலை தேடுதல் குழு செய்துகொண்டிருந்தது. தேடுதல் குழு சமயோஜிதமாக சிலவற்றை செய்து பார்த்தார்கள். ஹெலிகாப்டரில் பெரிய அளவிலான ஸ்பீக்கர்களைக் கட்டி, அந்த குழந்தைகளின் பாட்டி பேசியதை ஒலிபரப்பினார்கள். அந்த பாட்டியின் Huitoto மொழியில் "எங்க இருந்தாலும் அங்கயே இருங்க" என அந்த குரல் ஒலித்தாலும், குழந்தைகள் நகர்வதை நிறுத்தவில்லை. தேடுதல் குழுவிலிருந்து சிலர் விலக ஆரம்பிக்கிறார்கள். அந்த குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன், பிரிகேடியர் ஜெனரல் பெட்ரோ சொன்னதை நாம் இங்கு நினைவுபடுத்துவது மிகவும் அவசியம். ‘ஒரு வேளை அந்த குழந்தைகள் இறந்திருந்தா, இந்நேரம் நாம கண்டுபிடிச்சுருப்போம். ஆனா, நம்மளால கண்டுபிடிக்க முடியலைனாலே, கடவுள் புண்ணியத்துல் அந்த குழந்தைக எங்கேயோ உயிரோட இருக்காங்கன்னு அர்த்தம்". அந்த நம்பிக்கை தான் தேடுதலை இன்னும் விரிவுப்படுத்த வைத்தது.
உலகமே எதிர்பார்த்த அந்த அபூர்வ நிகழ்வு நடக்க கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகிவிட்டது. “Miracle! Miracle! Miracle! Miracle!” என தேடுதல் குழு ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது. குழந்தைகளின் புகைப்படத்தை ராணுவம் வெளியிட்ட போது, உலகமே ஆச்சர்யத்தில் மூழ்கியது. காரணம், குழந்தைகளுக்கு பெரிய அளவிலான காயம் எதுவுமே இல்லை. பூச்சி கடிகள் மட்டுமே தான் இருந்தது.
‘ஒரு விதைக்குள்ள அகப்பட்ட ஆலமரம் கண் விழிக்கும் அதுவரை பொறு மனமே’ என்னும் பாடல் வரிகளைப் போலத்தான் நம் உயிரும். இந்த பிரபஞ்சத்தில் எந்தவொரு உயிரும் அவ்வளவு எளிதில் போராடாமல் மரணித்து விடாது. எப்படியாவது சண்டை போடும். நீச்சலே அறியாமல் கடலில் விழுந்தாலும், மூன்று முறை கடல்நீர் நம்மை மேலே தள்ளுமாம். அந்தப் பிடிய அழுந்தப் பிடித்துக்கொண்டாலே போதும், தப்பித்துவிடலாம். ஜெனரல் பெட்ரோ "இந்த காடு அவர்களை காப்பாற்றியிருக்கிறது. அவர்கள் இந்த காட்டோட குழந்தைகள், இந்த கொலம்பியா தேசத்து குழந்தைகள்" என்று பெருமைப்பட்டு இருக்கிறார்.
உண்மையில், அந்த நான்கு குழந்தைகளும், நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டிருக்கும் நம்பிக்கையை நமக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.