ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் எம்.பி. அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு, அங்கு பெண்களுக்கான சுதந்திரம் முழுவதுமாகப் பறிக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தொடர்ந்து வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் அரங்கேறி வருகின்றன. பொது இடங்களுக்கு ஆண் துணையின்றி செல்லக் கூடாது என்பதுடன் உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில விளையாட்டு வீராங்கனைகள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், பெண்கள் உயர்கல்வி பயில்வதற்கும், பணி புரிவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவிர ஆடை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பெண்கள், ஆண் மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பல குடிமக்கள் அம்மண்ணைவிட்டு வெளியேறி வருகின்றனர். அதேநேரத்தில், அங்குள்ளவர்கள் தாலிபன் அரசாங்கத்தின் சட்டத்துக்கு உட்பட்டும் பலர் வாழ்ந்து வருகின்றனர். அதில் ஒருவர் முன்னாள் எம்.பி. முர்சால் நபிஜாதா.
இந்த நிலையில் அவர், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் காபூலில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற இச்சம்பவத்தில் அவரது பாதுகாவலரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில், நபிஜாதா மற்றும் அவரது பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்தனர். நபிஜாதாவின் சகோதரர் பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணையை தொடங்கியிருப்பதாக காபூல் காவல்துறை தெரிவித்துள்ளது.
2019இல் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் முர்சல் நபிசாதா, எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும்வரை (2021) அவர் பதவியில் இருந்தார். அவர் நாடாளுமன்ற பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார். தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு முதல்முறையாக முன்னாள் பெண் எம்.பி ஒருவர் கொல்லப்பட்டிருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.