பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு மட்டும் ரூ. 100 கோடி செலவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இலங்கையைப் போன்றே, இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானும் அதை சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தான், கடன், பெட்ரோலிய செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால், கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் மின்சாரம் மற்றும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 33 பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மார்ச் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 33 தொகுதிகளிலும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானே, பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியு மான ஷா மஹ்முத் குரேஷி, “அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சியின் ஒரே வேட்பாளராக இம்ரான் கான் இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இம்ரான் கான் பிரதமராய் இருந்தபோது அவரின் ஹெலிகாப்டர் பயணத்தால் அரசுக்கு ரூ.1 பில்லியன் செலவாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரின் ஹெலிகாப்டர் பயணம் குறித்த விசாரணையில் இத்தகவல் வெளியாகி இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின்பேரில் 2019 முதல் 2021 வரையிலான பயணங்களின்போது இம்ரான்கான் விவிஐபி (VVIP) ஹெலிகாப்டர் விமானங்களில் பயணித்ததற்காக சுமார் 1 பில்லியன் ரூபாய் செலவாகி இருக்கிறது என அவ்வலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2019 முதல் மார்ச் 2022 வரை, இஸ்லாமாபாத்தில் உள்ள தனது பானி காலா இல்லத்திலிருந்து பிரதமர் அலுவலகத்துக்கு 1,579.8 மணிநேரம் பயணிக்க இம்ரான் கான் அதிகாரப்பூர்வ இந்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் வெளிநாட்டுப் பிரமுகர்களிடம் இருந்து அன்பளிப்பாய்ப் பெற்ற பொருட்களையும் அரசுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்றதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் சூழலில், அதுவும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், இதுபோன்ற தகவல்கள் வெளியாகி இருப்பது இம்ரான் கான் தரப்புக்கு தலைவலியை ஏற்படுத்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், ’தனது வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையேயான 15 கி.மீ தூரத்தைக் கடக்க, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தினமும் ஹெலிகாப்டரில் பயணம் செய்து வருகிறார்’ என கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே செய்திகள் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.