உலகம்

பெய்ரூட் நகரை சீரமைக்கும் முன்னாள் போராளிகள்.. கிராமப் பெண்கள் உணவு சமைத்து உதவிக்கரம்

பெய்ரூட் நகரை சீரமைக்கும் முன்னாள் போராளிகள்.. கிராமப் பெண்கள் உணவு சமைத்து உதவிக்கரம்

webteam

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் நேரிட்ட வெடிவிபத்தால் அந்த நகரமே தலைகீழாக உருக்குலைந்தது. ஆக்ஸட் 4 ஆம் தேதியன்று நடந்த  விபத்தில் 178 பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரம் பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர் மக்கள் வீதிகளில் இறங்கி ஆளும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில், பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ள பெய்ரூட் நகரத்தை புனரமைக்கும் பணியில் தன்னார்வலர்களாக, உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த முன்னாள் போராளிகளும், விவசாயிகளும் ஈடுபட்டுள்ளனர். சிதிலமடைந்த கட்டடங்களைச சீரமைப்பதில் ஈடுபடும் போராளிகளுக்கு கிராமப் பெண்கள் உணவு சமைத்து உதவிவருகின்றனர்.

வாழ்வாதாரத்தை இழந்த லட்சக்கணக்கான மக்களை பெய்ரூட் நகரில் மீண்டும் குடியமர்த்தும் பணிகள் மும்முரமாக தொடங்கியுள்ளன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், பல தன்னார்வலர்களும் அந்தப் பணிகளைச் செய்துவருகின்றனர். கட்டட இடிபாடுகளை சரிசெய்து பழுதுபார்க்கும் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற 40 போராளிகள் திரிபோலி நகரில் இருந்து வந்துள்ளார்கள்.

"நாங்கள் உதவி செய்யவருகிறோம். எங்களுக்கு ஊதியம் தேவையில்லை என்று அந்தப் போராளிகள் கூறியது மனதைத் தொடுவதாக உள்ளதாக" ஒரு தொண்டு நிறுவனத்தின் தலைவர் லியா பரோவ்டி தெரிவித்துள்ளார்.