உலகம்

வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதை நிறுத்தி வைத்தது இலங்கை!

வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதை நிறுத்தி வைத்தது இலங்கை!

ஜா. ஜாக்சன் சிங்

பொருளாதார நிலை மோசமாக இருப்பதால் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம், தவறான பொருளாதாரக் கொள்கை, உக்ரைன் - ரஷ்யா போரின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கயைில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் ஆகியவற்றின் விலை அபரிமிதமாக அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு தற்போதைய நிலையில் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கோடி வெளிநாட்டுக் கடன் இருக்கிறது. இந்தக் கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் இலங்கை திவாலாகும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து வெளியேற இறுதி முயற்சியைத் தொடங்கியுள்ள இலங்கை அரசு, தனது வெளிநாட்டுக் கடன்கள் குறித்த இடைக்காலக் கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச மூலதனச் சந்தைகளில் பத்திர வடிவில் பெறப்பட்ட கடன், வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடன், வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன் உள்ளிட்ட கடன்களையும், அவற்றுக்கான வட்டியையும் திருப்பி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீள்வதற்காக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதுதொடர்பாக சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.