கால்பந்து வீடியோ காட்சி எக்ஸ் தளம்
உலகம்

பெரு | மழையால் வெளியேறிய கால்பந்து வீரர்கள்.. திடீரென மின்னலும் தாக்கியதால் விபரீதம்.. #ViralVideo

பெரு நாட்டில் கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மத்திய பெரு நாட்டில் உள்ள ஹுவான்காயோவில், நேற்று (அக்.3) ஜுவென்டுட் பெல்லாவிஸ்டா மற்றும் ஃபேமிலியா சோக்கா ஆகிய அணிகளுக்கிடையே கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, போட்டியை நிறுத்திய நடுவர், அனைத்து வீரர்களையும் மைதானத்தில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.

வீரர்களும் மைதானத்தில் இருந்து வெளியேறிக் கொண்டு இருந்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கு மின்னல் தாக்கியுள்ளது. அதில் 39 வயதான கால்பந்து வீரர் ஜோஸ் ஹூகோ டிலா குரூஸ் மேசா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு அருகில் சென்று கொண்டிருந்த கோல் கீப்பர் ஜுவான் சோக்காவும் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டார். தற்போது அவர், ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், எரிக் எஸ்டிவன் செசென்டே குய்லர், ஜோஷெப் குஸ்டாவோ பரியோனா சோக்கா மற்றும் கிறிஸ்டியன் சீசர் பிடுய் கஹுவானா ஆகிய வீரர்களும் தீக்காயமடைந்த நிலையில், அவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மைதானத்தில் மின்னல் தாக்கிய இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இந்தச் சோக சம்பவத்தைத் தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் மின்னலைத் தடுக்கும் சாதனங்களை அதிகளவில் மைதானங்களில் பொருத்த வேண்டும் என வர்ணனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: “சரியில்லை எனில், அந்த துறையையும் நானே ஏற்பேன்” - உள்துறை அமைச்சரை கடுமையாக விமர்சித்த பவன் கல்யாண்!