உலகம்

‌மிதக்கும் கால்பந்து மைதானம்: குவியும் சுற்றுலாப் பயணிகள்

‌மிதக்கும் கால்பந்து மைதானம்: குவியும் சுற்றுலாப் பயணிகள்

webteam

முற்றிலும் நீரில் மிதக்கும் ஒரு கிராமத்தில், கால்பந்து விளையாடுவது சாத்தியமா? சாத்தியப்படுத்தியுள்ளது தாய்லாந்தை சேர்ந்த ஒரு கிராமம்.

தாய்லாந்து நாட்டில் உள்ள கோஹ் பான்யீ (Koh Panyee) தீவுக்கு அருகே உள்ள மீனவ கிராமம் தான் இது. 200 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தக் கிராமத்தில் ஆயிரத்து 600 பேர் வசிக்கின்றனர். கடலால் சூழப்பட்ட இந்தக் கிராமத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு கால்பந்து விளையாட்டு என்றால் அப்படி ஒரு ஆர்வம். ஆனால் நீரில் மிதக்கும் இந்தக் கிராமத்தில் எப்படி கால்பந்து விளையாட முடியும்? விளையாட்டு மீதான இவர்களின் ஆர்வம் அதற்கும் ஒரு வழியை கண்டறிந்துவிட்டது.

மரத்தால் ஆன பலகைகளை கொண்டு கால்பந்து மைதானத்தை அமைத்து, இக்கிராமத்தைச் சேர்ந்த  சிறுவர்களும் இளைஞர்களும் அதில் பயிற்சி பெறுகின்றனர். சிறு கால்பந்து அணியாக தொடங்கி இந்தப் பகுதிக்கு என ஃபுட்பால் கிளப்பையே உருவாகியுள்ளது. இந்தக் கிராமத்தில் இருந்து கிட்டதட்ட 200 கால்பந்து வீரர்கள் உருவாகியுள்ளனர்.

மிதக்கும் மைதானத்தில் பயிற்சி பெற்ற இவர்களுக்கு உண்மையான கால்பந்து மைதானத்தில் விளையாடுவது முதலில் கடினமாக இருந்துள்ளது. அதனால் முதலில் பல போட்டிகளில் தோற்றாலும் அவற்றை எல்லாம் அனுபவங்களாக எடுத்து கொண்டு , தெற்கு தாய்லாந்தில் நடக்கும் இளைஞர்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் பெற்று வருகின்றனர்.

மிதக்கும் கால்பந்து மைதானம் அதில் உருவான கோஹ் பான்யீ ஃபுட்பால் கிளப் குறித்து 2011ஆம் ஆண்டு செய்திகள் வெளியாகின. அன்று முதல் இந்தப் பகுதி பிரபல சுற்றுலா தலமாகவும் மாறியுள்ளது. விளையாட்டு மீதான‌ ஆர்வம் இந்தச் சிறு கிராமத்தை உலகமறிய வைத்துள்ளது.