அமெரிக்காவின் கன்சாஸ் நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த போலீசார் விசாரணையில், அந்தச் சிறுமி அவருடைய தாயாராலேயே வீட்டைவிட்டு விரட்டப்பட்டிருக்கிறார் எனவும், அந்தச் சிறுமியை அவருடைய தாய் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அவருடைய தாய், ஏற்கெனவே தன் குழந்தைகளைச் சரியாக கவனிக்காத காரணத்துக்காக, 18 மாதம் சிறைத் தண்டனை பெற்றவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், அந்தச் சிறுமி அடிக்கடி அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று அவர்களிடம், ’ஏதாவது உணவு கிடைக்குமா’ எனக் கேட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான், சிறுமியின் தாய், அவரை வீட்டைவிட்டு விரட்டிய பிறகு, வீடற்ற நபர்கள் தங்கும் முகாமில் போய் தங்கியுள்ளார். அந்த முகாமில்தான் கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மைக்கேல் டபிள்யூ செர்ரி என்பவரும் தங்கியுள்ளார். இவர்தான் அந்தச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்க் அருகே, மிகவும் ஆபத்தான நிலையில் அந்தச் சிறுமி கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தவிட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், மைக்கேல் டபிள்யூ செர்ரியை கைது செய்தனர். அவர், டிசம்பர் மாதம் 21ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அப்பகுதியினர் போலீசாரிடம், ” ’நான் இங்கே தங்கிக் கொள்ளலாமா’ என அந்தச் சிறுமி முகாமில் இருந்தவர்களிடம் அடிக்கடி கேட்டார். மேலும், அந்தச் சிறுமி யாருடைய துணையுமின்றியே பொதுவெளியில் நடமாடியதைப் பார்த்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.