அண்டவெளியில் இருந்து வந்த குறுங்கோள் ஒன்று நமது சூரியக் குடும்பத்தை கடந்து சென்றதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறியுள்ளது.
வேறு ஒரு விண்மீன் குடும்பத்திலிருந்தோ அல்லது அண்டவெளியில் இருந்தோ இந்த A/2017 U1 என பெயரிடப்பட்டுள்ள குறுங்கோள் வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொலை நோக்கி மூலம் இந்தக் குறுங்கோள் கண்டறியப்பட்டதாகவும், அக்டோபர் 14 ஆம் தேதி, பூமிக்கு நெருக்கமாக அதாவது, 15 மில்லியன் மைல்கள் தொலைவில் இந்தக் குறுங்கோள் கடந்து சென்றதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதன் விட்டம் சுமார் 400 மீட்டர்கள். இதுவே அண்டவெளியில் இருந்து வந்து சூரிய குடும்பத்தை கடந்து செல்லும் முதல் குறுங்கோள் என்று கருதப்படுகிறது.
சூரியக் குடும்பத்தை கடந்து செல்லும் இந்தக் குறுங்கோளின் பாதையை தொலைநோக்கி மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன் பாதையிலிருந்து, குறுங்கோள் எங்கிருந்து வந்திருக்கலாம் என்று கணிக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.