தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் pt web
உலகம்

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. தமிழர் உட்பட 41 பேர் உயிரிழப்பு

PT WEB

குவைத்தில் மங்காஃப் என்ற பகுதியில் குடியிருப்பில் நேர்ந்த தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

இந்த தீ விபத்து அதிகாலை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர் உட்பட 4 இந்தியர்களும் உயிரிழந்துள்ளனர். ஒரே இடத்தில் அதிக சிலிண்டர்களை வைத்திருந்ததும் பராமரிப்பு இல்லாததும் விபத்திற்கு காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட துணைப் பிரதமர் ஷேக் ஃபஹத் யூசுப் சௌத் அல்-சபா, இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதுடன், ரியல் முதலாளிகளை குற்றம்சாட்டினார். மேலும் கட்டடத்தின் உரிமையாளரை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து நடந்த கட்டடம் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் தங்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைக் குறிப்பிட்டே துணைபிரதமரும் கருத்து தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்த உடனடித் தகவல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் விபத்து நடந்த காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.