பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் பார்ட்டியின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைக்குள்ளானதை அடுத்து அவர் ’’நானும் மனுஷி தான்’’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரீன். 36 வயதான இவர்தான் உலகிலேயே மிகவும் இளம்வயது பிரதமர் ஆவார். கடந்த வாரம் ஹெலன்ஸ்கியின் உள்ள பின்லாந்து பிரதமரின் வீட்டில் நடந்த பார்ட்டியில் அந்நாட்டின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அந்த பார்ட்டியில் இரண்டு பெண்கள் கட்டிபிடித்து முத்தமிடும் காட்சிகள் வெளியாகி வைரலாகின. இதற்கு பலதரப்பட்ட கருத்துகளை மக்கள் தெரிவித்துவந்தனர். இதுபோன்ற நடத்தைகளால் அவரது அரசு சம்பந்தப்பட்ட முடிவுகள் தவறாக போகலாம் என்பது போன்ற கருத்துகளை பதிவிட்டனர். மறுதரப்பினரோ ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பதவியையும் ஒப்பிடவேண்டாம் என்று தெரிவித்தனர்.
மேலும் அந்த பார்ட்டியில் அவர் போதைபொருள் எடுத்துக்கொண்டதாக சர்ச்சை கிளம்பியதை அடுத்து அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை போதை பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நெகட்டிவ் என்று வந்ததை அடுத்து மரீன் செவ்வாய்க்கிழமையன்று மன்னிப்பு கேட்டிருந்தார்.
அதனையடுத்து மரீன், ’முறையற்ற புகைப்படம் அது’. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘’அது ஒரு முறையற்ற புகைப்படம் என்பது எனது கருத்து. அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். அதுபோன்ற புகைப்படங்களை எடுத்திருக்கக் கூடாது. அதுதவிர அந்த get-together-இல் எதுவும் நடக்கவில்லை’’ என்று கூறியிருந்தார்.
மேலும், ’’நானும் மனுஷிதான். நானும் இந்த இருண்ட மேகங்களுக்கு நடுவே சில நேரங்களில் மகிழ்ச்சி, வெளிச்சம் மற்றும் வேடிக்கைகளுக்காக ஏங்குவதுண்டு. அது தனிப்பட்டது. அது மகிழ்ச்சி மற்றும் அது வாழ்க்கை. ஆனால் நான் ஒருநாள் வேலையைக்கூட தவறவிட்டதில்லை. கடந்த வாரம் எனக்கு கடினமானதாக இருந்தது. ஓய்வு நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதை விட வேலையில் நாம் என்ன செய்கிறோம் என்பதை மக்கள் பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்’’ என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
இதேபோல் ஜூலை மாதத்தில் ஒரு மியூசிக் பார்ட்டியில் மரீன் தனது ஓய்வுநேரத்தை மகிழ்ச்சியாக செலவிடும் புகைப்படங்கள் வெளியானதையடுத்து, அந்த புகைப்படம் தனது கடற்கரை வீட்டில் எடுக்கப்பட்டதாகவும், அங்கு அவர்கள் நீச்சலடித்து, சாப்பிட்டு நன்றாக நேரத்தை செலவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.