உலகம்

வேலை போச்சா! 60 நாள்கள்தான் கெடு; அமெரிக்காவில் தத்தளிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

வேலை போச்சா! 60 நாள்கள்தான் கெடு; அமெரிக்காவில் தத்தளிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

JustinDurai

அமெரிக்காவில் H1B  விசா வைத்திருப்பவர்கள் வேலையை இழந்த 60 நாட்களுக்குள் அடுத்த வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்ற கட்டாய சூழல் உருவாகியுள்ளது.

உலக அளவில் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருவது தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பணிநீக்க நடவடிக்கைகள்தான். எப்பொழுது தங்களை பணியில் இருந்து நீக்குவார்கள் என்று தெரியாத சூழலில் தொழிலாளர்கள் அச்சத்துடன் வாழும் நிலை தற்போது உள்ளது. அதுவும், உள்நாட்டில் இல்லாமல் வெளிநாடுகளில் தங்கி அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்களின் நிலை சற்றே துயரமான நிலைதான்.

இத்தகைய சூழலில்தான், அமெரிக்காவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளதால் வேலை இழந்த பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள், அடுத்தது என்ன செய்வது என்பது தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு H1B விசா வழங்கப்படுகிறது. H1B விசா நிபந்தனையின்படி அமெரிக்காவில் பணியாற்றும் ஒரு வெளிநாட்டுக்காரர் வேலையை இழந்தால் 60 நாட்களுக்குள் நாட்டை காலி செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.

இங்குதான் இப்போது சிக்கல். அமெரிக்காவில் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளதாலும், புதிய பணியிடங்களை நிரப்புவதை தள்ளிப் போட்டிருப்பதாலும் புதிய வேலை உடனடியாக கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை. எனவே அமெரிக்காவில் இப்போதைக்கு புதிய வேலை கிடைக்கக்கூடிய சூழல் இல்லை என்பதும் அதுவும் 60 நாட்களுக்குள் வேலை என்பதெல்லாம் சாத்தியமில்லாத விஷயமாக உள்ளது. 

எனவே அமெரிக்காவில் வேலையிழந்த வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். வேலைநீக்க நோட்டீசை பெற்ற பல வெளிநாட்டு ஊழியர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் படித்து வருகிறார்கள். அவர்கள் படிப்பு பற்றியெல்லாம் அந்த குடும்பங்களுக்கு பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.