அண்மையில் நடந்து முடிந்துள்ள இஸ்ரேல் தேர்தலில் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு தேர்வாகியுள்ளார். நெதன்யாகுவின் லிகுட் கட்சி, வலதுசாரி கூட்டாணியுடன் சேர்த்து 64 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
மொத்தம் 120 தொகுதிகளைக்கொண்ட இஸ்ரேலில் கடந்த 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்தே பெஞ்சமின் நெதன்யாவுக்கும் சாதகமாக இருந்தது. ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பெஞ்சமின்தான் வெற்றிபெறுவார் என கருத்து கணிப்பு வெளியிட்டன. அதன்படி முடிவுகளும் அமைந்தன.
போனில் நெதன்யாகுவை வாழ்த்திய யாயிர் லாபிட்!
தேர்தலில் வெற்றி உறுதியான பிறகு நெதன்யாகுவிற்கு போன் செய்து யாயிர் லாபிட் வாழ்த்து தெரிவித்தார். அதிகார மாற்றத்திற்கான அனைத்து பணிகளையும் முடுக்கிவிடும்படி பிரதமர் அலுவலகத்தின் அனைத்து துறைகளுக்கும் லாபிட் அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேல் அரசானது அரசியல் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகு கடந்து வந்த பாதை
இஸ்ரேல் நாட்டு பிரதமராக 1996-1999 ஆண்டில் பதவி வகித்தார். அதன் பின்பு மீண்டும் 2009ம் ஆண்டில் பிரதமராகி தொடர்ந்து 12 ஆண்டுகள் பதவி வகித்தார். இந்நிலையில், கடந்த வருடம் ஜூன் மாதம், ஒரு பெண் எம்.பி ராஜினாமா செய்த நிலையில், பெரும்பான்மை இழந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் பிரதமராக பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் நெதன்யாகு கூட்டணி பெரும்பான்மை எண்ணிக்கையை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு ஏன் பதற்றம்?
பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தேர்வாகியிருப்பது பாலஸ்தீனியர்கள் உட்பட அரபு நாடுகளிடையே பதற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், 1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இன்றளவு அந்த அங்கீகாரத்தை பெற பாலஸ்தீன மக்கள் போராடி வருகின்றனர். இதனால் அவ்வபோது இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் இஸ்ரேலிலுள்ள அரசுகள் எப்போதும் தங்களது ஆதரவை அந்நாட்டு பிரதமருக்கு கொடுத்ததில்லை. நெதன்யாகு பிரதமாராக இருந்த போது, பாலஸ்தீனர்கள் சரியாக நடத்தப்பட வில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் தொடர்ந்து வலுத்தி வந்தனர். மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் இணைந்து பாலஸ்தீனர்களுக்கு எதிராக போர் மற்றும் குற்றங்களில் ஈடுப்பட்டதால் பாலஸ்தீன மக்களின் கடும் கோபத்துக்கு ஆளானார் நெதன்யாகு.
இதனால், நெதன்யாகுவுக்கு எதிராக அரபு கட்சிகள் ஒன்றிணைந்து, 2019-ம் ஆண்டு முதன்முறையாக முன்னாள் ராணுவத் தளபதி பென்னிக்கு தங்கள் ஆதரவை அளித்து, நெதன்யாகுவுக்கு எதிராக தங்களை முன்னிருந்திக்கொண்டார்கள். இதனால், நெதன்யாகுவுக்கும் பாலஸ்தீனர்கள் மற்றும் அரபு கட்சிகளுக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் தான் தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு என்ன பயன்?
இந்தியா – இஸ்ரேல் உறவு பல ஆண்டுகளாக ஆரோக்கியமான போக்கை கொண்டுள்ளது. பிரதமர் மோடியும், நெதன்யாகுவும் சந்தித்து இரு நாடு உறவு குறித்த சந்திப்புகளை நடத்தியுள்ளனர். நெதன்யாகு இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் பயணம் மேற்கொண்ட இரண்டாவது இஸ்ரேல் பிரதமர் அவர். அதேபோல், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டில் பயணம் மேற்கொண்டார்.
நெதன்யாகு மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றவுடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ’’இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த நெதன்யாகுவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்’’ என மோடி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை பொறுத்த வரை, ராணுவ கட்டமைப்புகளை உருவாக்குவதில் இஸ்ரேல் தான் முன்னோடியாக இருந்து வருகிறது. முன்னதாக இந்தியவுக்கு தேவையான ராணுவ கட்டமைப்புகளில் இஸ்ரேல் உதவியது போலவே இனி வரும் காலங்களிலும் இஸ்ரேலிடமிருந்து ராணுவத்துக்கு தேவையான உதவிகள் இந்தியாவுக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.