பிலிப்பைன்ஸ் நாட்டில் என்றும் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உடனே முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு அந்நாட்டின் மூத்த மருத்துவர்கள் அக்கறையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தலைநகர் மணிலாவில் முழுமையான பொதுமுடக்கத்தைக் கடைபிடிக்காவிட்டால், பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று மருத்துவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் போரில் தோல்வியைச் சந்திக்க நேரும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பிலிப்பைன்ஸின் பலவீன சுகாதார முறையால் ஏற்பட்டுள்ள சரிவைத் தவிர்க்க கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மணிலாவில் உள்ள இரண்டு பெரிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள மருத்துவப் பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான மருத்துவனைகளில் நோயாளிகளால் படுக்கைகள் நிரம்பியுள்ளன. புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
“எங்கள் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர். எல்லையற்ற கொரோனா நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பது மருத்துவமனையில் அனுமதிப்பது என விழிபிதுங்கி நிற்கிறார்கள். நாங்கள் கொரோனாவுக்கு எதிராக ஒரு தோல்வியான போரையே நடத்திக்கொண்டிருக்கிறோம். உடனடியாக ஒரு உறுதியான செயல்திட்டத்தை வகுக்கவேண்டும்” என்கிறார் பிலிப்பைன்ஸ் மருத்துவர்கள் சங்கத் தலைவர் ஜோஸ் சான்டியாகோ.
கடந்த இரண்டு நாட்களாக பிலிப்பைன்ஸில் தினமும் 4 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை அங்கே ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் கொரொனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.