உலகம்

எஃப்பிஐ தலைவர் நீக்கம்: ட்ரம்ப் திடீர் நடவடிக்கை

எஃப்பிஐ தலைவர் நீக்கம்: ட்ரம்ப் திடீர் நடவடிக்கை

webteam

அமெரிக்காவில் மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கோமே பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நீதித்துறை அமைச்சர் ஜெஃப் செசன்ஸின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எஃப்பிஐ தலைவர் கோமே பதவி நீக்கக் கடிதத்தில், நீதித்துறையின் பரிந்துரைப்படி உடனடியாக கோமே பதவி நீக்கம் செய்யப்படுவதாகவும், அலுவலகத்தை உடனே காலி செய்யவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கோமேயால் எஃப்பிஐ-ஐ சரியான முறையில் வழிநடத்த முடியவில்லை என்ற நீதித்துறையின் பரிந்துரையை ஏற்று கோமே-ஐ பதவி நீக்கம் செய்யப்படுவதாக ட்ரம்ப் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹிலரி கிளின்டன் மின்னஞ்சல் விவகாரத்தில் கோமேயின் செயல்பாடு திருப்தி அளிக்காததால், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் டொனால்டு ட்ரம்பின் பரப்புரைக் குழுவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான தொடர்பு குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்கியதன் காரணமாகவே ஜேம்ஸ் கோமே நீக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஹிலரிக்கு எதிராக ட்ரம்புக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ரகசியக் கூட்டு இருந்ததாக புகார்களும் சர்ச்சைகளும் எழுந்தன. இந்த நிலையில் எப்பிஐயின் விசாரணையின் முடிவு தனக்கு எதிராக வந்து விடும் எனும் அச்சத்தின் காரணமாகத்தான் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மத்தியப் புலனாய்வு அமைப்பிற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.