உலகம்

வீட்டுக்குள் வந்த பள்ளி வகுப்பறை.. மகளுக்காக தந்தை செய்த அசத்தல் ஐடியா..!

வீட்டுக்குள் வந்த பள்ளி வகுப்பறை.. மகளுக்காக தந்தை செய்த அசத்தல் ஐடியா..!

webteam

ஆன்லைனில் படிக்கும் மகளுக்காக தந்தை ஒருவரின் பிரத்யேக ஏற்பாடு இணையத்தில் வைரலாகியுள்ளது.

கொரோனாவுக்கு பிறகு உலக மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் மாறியுள்ளது. வெளியில் சென்றாலே மாஸ்க், கைகளில் சானிடைசர் என வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளின் பாடமுறை ஆன்லைன் பக்கம் சென்றுவிட்டது. பைகளை மாட்டிக்கொண்டு பள்ளி சென்ற மாணவர்கள் இன்று கம்யூட்டர் முன்னும், செல்போன் முன்னும் அமர்ந்திருக்கிறார்கள். பலருக்கு அந்த வசதியும் இல்லாத நிலையில் கல்வி கேள்விக்குறியாகியும் வருகிறது. அலுவலகங்கள் பல கூகுள், ஜூம் போன்ற செயலிகள் மூலம் கலந்துரையாடுகின்றன. இப்படி அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா.

இந்நிலையில் இப்படி ஆன்லைனில் படிக்கும் மகளுக்காக தந்தை ஒருவரின் பிரத்யேக ஏற்பாடு இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த தந்தை தன் செல்ல மகளுக்காக ஒரு பள்ளிக்கூட வகுப்பறையின் மாதிரியை வீட்டு அறைக்குள் தயார் செய்துள்ளார். அமர்ந்து எழுத டேபிள், எதிரே போர்ட் என வசதி செய்துள்ளார். ஆனால் ஆசிரியர்?. அதற்கும் ஏற்பாடு செய்துள்ளார் அந்த அசத்தல் தந்தை.

ஒரு ஆசிரியரின் உருவத்தை தயார் செய்து அதன் முகப்பகுதியில் மட்டும் ஆசிரியரின் நேரடி பாடத்தை டேப்லட் மூலம் இணைத்துவிட்டார். பார்ப்பதற்கு ஆசிரியை நின்றுகொண்டு பாடம் எடுப்பது போலவே உள்ளது. ஆன்லைன் வகுப்பை பள்ளி வகுப்பறை போலவே ஏற்பாடு செய்துள்ள தந்தைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.