video image எக்ஸ் தளம்
உலகம்

பாகிஸ்தான்|மகள் தலையில் சிசிடிவி கேமரா; 24மணிநேரமும் கண்காணிக்கும் தந்தை-பின்னணி இதுதான் #ViralVideo

Prakash J

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. எனினும், அவற்றுக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்படுவதுடன் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இன்று வளர்ந்து வரும் உலகில், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள தந்தை ஒருவர் தனது மகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராவை தலையில் பொருத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது மகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் தனது மகளின் தலையில் சிசிடிவி கேமராவைப் பொருத்தியுள்ளார். அந்தப் பெண்ணும், தான் எங்குச் சென்றாலும் தலையில் சிசிடிவி கேமராவுடனேயே சென்று வருகிறார். இவ்வாறு அந்தப் பெண் தலையில் சிசிடிவியுடன் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அந்தப் பெண், “நான் எங்கெல்லாம் சென்றுவருகிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்வதற்காக எனது அப்பா என்னுடைய தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். எனது தந்தைதான் என்னுடைய பாதுகாவலர். சிசிடிவி பொருத்தியிருப்பது எனக்கு பாதுகாப்பாகத்தான் உள்ளது.

கராச்சியில் பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், கொலைச் சம்பவங்கள் போன்றவை அரங்கேறி வருகின்றன. இதனால், எனது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என் தந்தை சிசிடிவி கேமராவை என் தலையில் பொருத்தியிருக்கிறார். இதனைப் பொருத்துவதற்கு நான் என் தந்தையிடம் எந்தவொரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

என்னதான் அந்தப் பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் இது ஒரு மோசமான செயலாகவே பார்க்கப்படுகிறது. பெண்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். பாதுகாப்பு சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் அதனை வேறு வழிகளில் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, இதுபோன்று சிசிடிவி கேமராக்கள் பெண்கள் தலையில் வைப்பது மிகவும் மோசமான செயல் ஆகும்.