ஜெர்மனி போராட்டம் ட்விட்டர்
உலகம்

விவசாயிகள் போராட்டத்தால் குலுங்கியது ஜெர்மனி.. சாலைகளில் வரிசைகட்டி நிற்கும் டிராக்டர்கள்!

ஜெர்மனியில் விவசாயிகள் டிராக்டர்களை நடுரோட்டில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Prakash J

ஜெர்மனி அரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கிவந்த மானியங்களைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்தது. இதனை கண்டித்து அனைத்து மானியங்களையும் முறையாக வழங்க வேண்டும் என நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று, டிராக்டர்களுடன் தலைநகர் பெர்லினை நோக்கிச் சென்று தங்களது எதிர்ப்பைக் காட்டினர். ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் உட்பட பல நகரங்களில் விவசாயிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, இந்த வேலைநிறுத்தத்திற்கு ஜெர்மன் விவசாயிகள் சங்கம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக, கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் ஏராளமான விவசாயிகள் பெர்லினுக்கு வரத் தொடங்கினர். அங்கு, வரலாற்று சிறப்புமிக்க பிராண்டன்பர்க் கேட் அருகே விவசாயிகள் ஏராளமான டிராக்டர்களை நிறுத்தி வைத்தனர். நாடு முழுவதும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு ஜெர்மனியில் பல இடங்களில் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் முழுவதும் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் தொடரும் என்றும் ஜனவரி 15ஆம் தேதி பெர்லினில் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: உலகம் முழுவதும் இத்தனை போர்கள் நடக்கிறதா! ஓயாத சண்டைகளால் பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும் நாடுகள்!