கிரீஸ் தலைநகர் ஏதென்சில் சுமார் 8 ஆயிரம் விவசாயிகள் நாடாளுமன்றத்துக்கு முன்பாக நேற்று கூடினர். 130 டிராக்டர்களுடன் வந்த அவர்கள், “விவசாயிகள் இல்லாவிட்டால், உணவும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது” என்ற முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து மற்றும் இத்தாலி நாடுகளிலும் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாக ‘விவசாயத்தை மேற்கொள்வதற்கான செலவுகள் பலமடங்கு அதிகரித்துவிட்டது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது இருந்தது. கிரீஸ் விவசாயிகள், “விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு 60 சதவிகிதத்திற்கு மேல் குறைந்துவிட்டது. எங்கள் வருவாயோ இதுவரை இல்லாத அளவு சரிந்துவிட்டது” என குற்றம்சாட்டுகிறார்கள்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலும், ஐரோப்பிய யூனியனின் வேளாண் கொள்கைகளை கண்டித்து விவசாயிகள் பெருமளவில் குவிந்தனர். கடந்த 2 வாரகாலத்திற்கும் மேலாக ஸ்பெயின் முழுவதும் விவசாயிகள் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். மாட்ரிட்டில் 500க்கும் அதிக டிராக்டர்களுடன் விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் பலர் தலைநகருக்கு வெளியே தடுக்கப்பட்டதால் எல்லையிலேயே அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள புதிய விதிகள் மற்றும் ரஷ்யா, உக்ரைன் போரால் அதிகரித்துவரும் பணவீக்கம், விவசாயிகளை போராட்டக்களத்திற்கு தள்ளியிருக்கிறது. பசுமை ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய யூனியன், விவசாயிகள் மீது விதித்துள்ள விதிமுறைகள், ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரிப்பால் உள்நாட்டு விளைப்பொருட்களின் விலையில் சரிவு உள்ளிட்ட காரணங்கள், ஐரோப்பிய நாடுகளின் விவசாயிகளை கொந்தளிப்படைய வைத்திருக்கின்றன.