நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது.
இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்படலாம் என்ற பேச்சும் உலா வருகிறது. அடுத்த அதிபராகப் பதவியேற்கவுள்ள ட்ரம்ப், போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வழிமுறைகளைக் கையாளுவேன் என உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை விமர்சித்த அந்நாட்டுச் சமையல் கலைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான அலெக்ஸி ஜிமின் என்ற சமையல் கலைஞர், ரஷ்ய தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். இதன்மூலம் நன்கு பிரபலமான அவர், கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைனில் முழு அளவிலான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, அதுகுறித்து நாட்டுக்கு எதிராகவும் அதிபர் புதினுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்.
இதையடுத்து, அவரது சமையல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்தில் சமையல் கலைஞராக வேலைபார்த்து வந்தார். இங்கிலாந்துக்கு சென்றதிலிருந்து, அவர் ரஷ்யாவுக்கு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. உக்ரைனுக்கு நன்கொடை வழங்கியதால், அவருக்கும் அவர் வேலைபார்த்து வந்த உணவகத்துக்கும் அச்சுறுத்தல் வந்ததாகவும் உணவக உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், அவர், 'பிரிட்டன் ஆங்கிலோமேனியா’ என்ற புத்தகத்தை விளம்பரப்படுத்துவதற்காக செர்பியா நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கே அவர், ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து, அவரது மரணத்தில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என்று தெரிவித்த காவல் துறையினர், உடற்கூராய்வு அறிக்கை வெளியானவுடன்தான் முழுவிவரம் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உணவகத்தின் இணை உரிமையாளரான கேடரினா டெர்னோவ்ஸ்கயா, “அவரது மர்ம மரணத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நாங்கள் அவரைக் கடைசியாகப் பார்த்தபோது, அவர் சிரித்துக்கொண்டே நல்ல மனநிலையுடன் இருந்தார். இரவு உணவு அருமையாக இருந்ததாகவும், தாம் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்தார்” எனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள ஜிமின் பணிபுரிந்த உணவகமும் இன்ஸ்டாகிராமில் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அது, "எங்களுக்கு, அலெக்ஸி ஒரு சக ஊழியர் மட்டுமல்ல, ஒரு நண்பராகவும் இருந்தார். அவரிடம் நாங்கள் பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். அலெக்ஸியின் நினைவாக இன்று நாங்கள் பெற்ற அன்பான வார்த்தைகளுக்கு நாங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வலிமிகுந்த இழப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவைப் பொறுத்தவரை அந்நாட்டில் உக்ரைனுக்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் அவருக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை விதித்து வருகிறது. அந்த வகையில், க்சேனியா கரெலினா (Ksenia Karelina) என்ற பெண்ணைத் தேசத் துரோகக் குற்றத்தின்கீழ், இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்தது. ரஷ்யா, அமெரிக்கா என இரட்டைக் குடியுரிமைப் பெற்றிருந்த இவர், உக்ரைன் ராணுவத்திற்கு நிதி திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டார். 51.80 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4,500) நிதியை அவர் திரட்டியதாகக் ரஷ்ய நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
மேலும் அவர்மீது, அமெரிக்காவில் உக்ரைனுக்கு ஆதரவான நிகழ்த்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, ரஷ்யாவின் யெகடெர்ன்பெர்க்கில் அவர் கைதுசெய்யப்பட்டார். அப்போது அவருடைய கண்கள் கட்டப்பட்டு, அதிகாரிகளால் குறுகிய பாதை வழியாக அழைத்துச் செல்லப்படும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.