ஆஸ்திரேலியாவில் பல்வேறு அழகு அறுவைசிகிச்சைகள் மூலம் மனித பார்பியாக தன்னை மாற்றிக்கொண்ட பெண்ணை பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உதறித்தள்ளியுள்ளனர். இதனால் மன வேதனையில் இருப்பதாகக் கூறுகிறார் இந்த மனித பார்பி.
ஜெர்மனில் பிறந்து ஆஸ்திரேலியாவின் வியன்னா நகரில் வசித்துவருபவர் 21 வயதான ஜெசிக்கா. தற்போது தன்னை ஜெஸ்ஸி பன்னி என்று அழைத்துக்கொள்ளும் இவர் பார்பி டால் போல தன்னை மாற்றியமைக்க 70,000 டாலர்களுக்கும் மேல் செலவுசெய்து பல்வேறு காஸ்மட்டிக் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். ஃபேஷன் மாடல் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஜெஸ்ஸியை தனது சொந்த குடும்பமே புறக்கணித்துவிட்டதாக வருத்தம் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா மீடியாவான ஹியூட்டுக்கு அவர் அளித்த பேட்டியில் தனது சோகக் கதையை பகிர்ந்திருக்கிறார். கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த வளர்ந்த ஜெஸ்ஸியை பெற்றோர்கள் கவனத்துடன் வளர்த்திருக்கின்றனர். குறிப்பாக ஆடைகளில் கவனம் செலுத்தும் பெற்றோராக இருந்திருக்கின்றனர்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பெற்றோர் கொடுத்த பணத்தை வைத்து தனது முதல் மார்பக அறுவைசிகிச்சையை மேற்கொண்டுள்ளார் ஜெஸ்ஸி. இதனால் பெற்றோரின் வெறுப்பை சம்பாதித்த அவர் தனது லட்சியக் கனவை அடைய 17வது வயதில் வீட்டை வெளியேறியிருக்கிறார். அதன்பிறகு பல்வேறு கட்ட மார்பகம், உதடு, மூக்கு மற்றும் பின்புற அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டு தற்போது மனித பார்பியாகவே தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். தனது சகோதரர் மற்றும் தாத்தா பாட்டியை மிகவும் பிடிக்கும் என்பதால் அவர்களை தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் அவர்கள் அனைவரும் அனைத்து தொடர்புகளையும் இவருடன் துண்டித்துவிட்டதாக வருத்தத்துடன் கூறுகிறார் ஜெஸ்ஸி.
தற்போது இந்த அறுவைசிகிச்சையால் தனது தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதாகவும், தனது மொத்த உடலையே பார்பி டாலாகவே மாற்ற இருப்பதாகவும், இதற்கு மேலும் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார் ஜெஸ்ஸிகா.