உலகம்

"இலங்கையை சிதைத்த குடும்ப அரசியல்" - யார் இந்த ராஜபக்சே..?

"இலங்கையை சிதைத்த குடும்ப அரசியல்" - யார் இந்த ராஜபக்சே..?

Veeramani

இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கி சிதையும் இலங்கையின்  அரசியலை 20 ஆண்டுகளாக தன் கைக்குள் வைத்திருக்கும் மகிந்த ராஜபக்சேவின் வரலாறு என்ன என்று பார்ப்போம்....

பாதை அமைத்து கொடுத்த தந்தை - படிப்படியாக எழுந்த மகிந்த:

இலங்கையில் ஆரம்பத்தில் இரண்டு கட்சிகள்தான் பிரதானமானவை, அவை ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை சுதந்திர கட்சி ஆகியவைதான். இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர்  பண்டாரநாயகாவின் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கையில் சிங்களம் மட்டுமே தேசிய மொழி, பவுத்தம் மட்டுமே தேசிய மதம் என இன, மத அரசியல் கூர்மைப்படுத்தப்பட்டது, அதற்கு சட்டவடிவமும் கொடுத்தார். இந்த கட்சியின் நாடாளுமன்ற  உறுப்பினராக பதவி வகித்தவர்தான் டி.ஏ.ராஜபக்சே, இவர்தான் மகிந்த ராஜபக்சேவின் தந்தை. 1945 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் பிறந்த மகிந்த ராஜபக்சே, ஆரம்ப காலம் தொட்டே அரசியலில் ஆர்வத்துடன் பங்கேற்றார், தந்தையின் தேர்தல் பிரச்சாரங்களிலும் தீவிரம் காட்டினார். தந்தையின் மறைவுக்கு பின்னர் மகிந்த ராஜபக்சே அரசியலுக்கு வந்தார். அவர் 1970இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார், அரசியலில் இருந்தவாறே 1977இல் சட்டப்படிப்பையும் முடித்தார்.



தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த ராஜபக்சே திடீரென 1978இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார், அதன்பின்னர் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்சேவுக்கு தோல்வி முகம்தான். அந்த காலகட்டத்தில் வழக்கறிஞராக முனைப்புடன் பணியாற்றினார் மகிந்த. இதன்பிறகு 1989இல்தான் மீண்டும் தேர்தலில் வெற்றியடைந்தார் இவர், பின்னர் 1994 தேர்தலிலும்  வென்று சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான மக்கள் முன்னணி ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராகவும், பின்னர் மீன்வளத்துறை அமைச்சராகவும்  பணியாற்றினார்.
சந்திரிகாவின் காலகட்டத்தில்தான் விடுதலைப்புலிகளுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்தன. பின்னர் 2002 இல் எதிர்க்கட்சி தலைவராகவும், பிறகு 2004ம் ஆண்டு இலங்கையின்  13வது பிரதமராக பதவியேற்றார், 2005இல் இலங்கையின் உச்சபட்ச அதிகார பதவியான அதிபர் பதவியையும் அடைந்தார்.

வீரியமடைந்த இன பாகுபாடு - வென்ற ராஜபக்சே:

1994இல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இருந்தே தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் மீதான எதிர்ப்பை தீவிரப்படுத்த தொடங்கினார். எதிர்க்கட்சியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கே தமிழர்கள் மீது மென்மையான போக்கினை கடைப்பிடித்த காலகட்டத்தில், ராஜபக்சேவின் வார்த்தைகளில் வன்மையான வெறி தகித்தது. இந்த சூழலில்தான் 2005 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார் மகிந்த, அவருக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே களமிறங்கினார். ஆனால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தது விடுதலைப்புலிகள் அமைப்பு. இதன் காரணமாக இத்தேர்தலில் மிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ராஜபக்சே. ஒருவேளை தமிழர்கள் வாக்களித்திருந்தால் ரணில் அதிபராகியிருப்பார், தமிழர்களின் வாழ்வும் இத்தனை இன்னலில் சிக்கியிருக்கவும் வாய்ப்பில்லை.



இலங்கையில் 6வது அதிபராக 2005இல் பொறுப்பேற்ற ராஜபக்சே, ஏற்கனவே இலங்கையில் கூர்மையடைந்திருந்த இன பாகுபாட்டை மேலும் கூர்தீட்டினார். இதன் தொடர்ச்சியாக இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான போர் தீவிரமடைந்தது, இந்த போரில் தமிழர்களும் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன. பல உலக நாடுகளின் உதவியுடன் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க தீவிரமாக களமிறங்கி, அத்தனை போர் நெறிமுறைகளையும் தவிடுபொடியாக்கிவிட்டு 2009இல் அவர்களை வீழ்த்தினார் ராஜபக்சே.

எழுந்த குடும்ப அரசியல் - வீழ்ந்த இலங்கை:

அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த இலங்கை, தாமும் வீழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணரவில்லை. இருந்தபோதும் 2015இல் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக சிறீசேனா, ரணில் விக்கிரமசிங்கே கூட்டணி  இலங்கையில் ஆட்சிக்கு வந்தது. பிறகு சிறீசேனா - ரணில் கருத்துவேறுபாடு காரணமாக ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ராஜபக்சே 2018இல் திடீரென இலங்கையின் பிரதமரானார், பின்னர் நீதிமன்றத்தால் அது செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அவர் பதவி விலகினார். 2019இல் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரானார் மகிந்த ராஜபக்சே.



இவர் மீது தற்போதும் பல மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகளும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை வைக்கின்றன. அமெரிக்காவில் ராஜபக்சே மீது ஒரு மனித உரிமை வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், தமிழர்கள் மீதான இனவெறி படுகொலைகள் குறித்து நியாயமாக எழுதிய பல பத்திரிகையாளர்களை கொன்றுள்ளதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆரம்பம் முதலே இலங்கை சுதந்திர கட்சியில் இருந்துவந்த ராஜபக்சே, 2018 இல் அந்த கட்சியை உடைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் புதிய கட்சியை உருவாக்கினார். மேலும், இவர் அரசியலில் இருந்தபோது இவரது தம்பிகள் கோத்தபய ராஜபக்சே,  பசில் ராஜபக்சே ஆகியோர் அரசியலில் அமைச்சர் உள்ளிட்ட உயர்பதவிக்கு கொண்டுவந்தார். தற்போது ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கையின் உயர்பதவியான அதிபர் பதவியை வகிக்கிறார். மற்றொரு தம்பி பசில் ராஜபக்சே இலங்கையில் அமைச்சராக உள்ளார், ராஜபக்சேவின் மற்றோரு தம்பியான சமல் ராஜபக்சேவும் இலங்கையின் பாசனத்துறை அமைச்சராக உள்ளார் அவரின் மகன் நாமல் ராஜபக்சேவும் அமைச்சராக உள்ளார், இவரின் மற்றொரு மகனும் அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்தான்.



இவர்கள் தவிர ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த மேலும் பலரும் அரசியல் மற்றும் அதிகார பதவிகளில் கோலோச்சுவதால் சிங்கள மக்களே இப்போது கொந்தளிப்பில் உள்ளனர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தின் 20 ஆண்டுகால ஊழல் அரசியல்தான் என்பது அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது