greta thunberg file imag
உலகம்

FACTCHECK | “சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆயுதங்களை பயன்படுத்தலாம்..” கிரெட்டாவின் வைரல் வீடியோ உண்மையா?

போர் நீடித்தால், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கிரெட்டா தன்பெர்க் கூறுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக்கப்பட்டுள்ளது. உண்மையில் கிரெட்டா சொன்னது என்ன? விரிவாக அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

யுவபுருஷ்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீனர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா, அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பல சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில், பாலஸ்தீன பகுதியான காஸாவுக்கு கிரெட்டா ஆதரவாக பேசியது இணையத்தில் பேசுபொருளானது.

இந்நிலையில், போர்களின்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்பது போன்று அவர் பேசும் வீடியோ வைரலாக்கப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பரப்பப்படும் அந்த வீடியோவில் “நாடுகளுக்கு இடையே நடைபெறும் போரானது தொடர்ந்தால், பேட்டரியில் இயங்கும் போர் விமானங்களை பயன்படுத்தலாம்.

மக்கும் தன்மை கொண்ட ஏவுகணைகளை கையாளலாம்” என்று கூறுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் நெட்டிசன்கள், கிரெட்டாவை கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில், பரப்பப்படும் இந்த வீடியோவின் ஒரிஜினல் வீடியோ குறித்த தகவல்களை அலசியபோது, காலநிலை பிரச்சனையை சமாளிப்பது குறித்து பிபிசி செய்தி நிறுவனத்திற்கு கிரெட்டா பேசிய வீடியோ கிடைத்தது. இது கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி அந்த வீடியோ வெளியானதும் தெரியவந்தது. அந்த ஒரிஜினல் வீடியோ, இங்கே:

காலநிலை மாற்றம் குறித்த அவரது பேச்சை, AI தொழில்நுட்பம் கொண்டு மாற்றி போர் ஆயுதங்கள் தொடர்பாக பேசியதாக சித்தரிக்கப்பட்ட செய்தியும் தற்போது உறிதியாகியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுத்த கிரெட்டா மீது இப்படி ஒரு அபாண்ட பழியை சுமத்துவதா என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சுதாரித்துக்கொண்ட ட்விட்டர், இந்த போலி வீடியோக்களின் கீழே கீழ்க்காணும் வகையில் ஒரு எச்சரிக்கையை காண்பித்துவருகிறது.

இருப்பினும் வேறு தளங்களிலும் வீடியோ பரப்பப்படும் அபாயம் உள்ளது. முன்பெல்லாம் புகைப்படங்களை மார்ஃப் செய்து போலி செய்தி பரப்பியவர்கள், இப்போது வீடியோவை மார்ஃப் செய்வது இணைய உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.