கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காஸா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுத்துவரும் நிலையில், தற்போது ஈரான், இஸ்ரேல் மீது போர் தொடுத்துள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக கட்டடத்தின் மீது இஸ்ரேல் சமீபத்தில் (ஏப்ரல் 1) தாக்குதல் நடத்தியதில் முக்கிய அதிகாரிகள் என 13 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்ததுடன், அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் கூறியது. இந்தப் போரிலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உதவி வருகிறது. இதனால் அப்பகுதியில் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் செல்லும் வழியில் ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்த ஈரானிய ஆளில்லா விமானங்களை ஜோர்டான் நாட்டு இளவரசி சல்மா பின்ட் அப்துல்லா சுட்டு வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகின. அதாவது, ’ஜோர்டானின் இளவரசி சல்மா நேற்று இரவு (ஏப்ரல் 14) 6 ஈரானிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தினார்’ எனச் செய்தியைச் சமூக வலைதளங்கள் பகிர்ந்ததுடன், விமானப்படை பைலட் சீருடையில் இருந்த புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தன. இதையடுத்து, இந்தச் செய்தி பேசுபொருளானது. ஆனால், இதில் உறுதி தன்மையில்லை என தற்போது ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ராயல் ஜோர்டானிய விமானப் படையின் பைலட்டாக சல்மா பின்ட் இருந்தாலும், அவர் ஈரானிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையில் பங்கேற்றார் என்ற கூற்று, எந்த அதிகாரப்பூர்வ ஆதாரங்களாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் தவறானது என ஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. அதில் இருந்த படம், 2023ஆம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'காஸாவில் மருத்துவப் பொருட்களை ஏர் டிராப் செய்ய விமானப்படைக்கு ஜோர்டான் இளவரசி சல்மா தலைமை தாங்குகிறார்’ என கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 15ஆம் தேதி வெளியான எக்ஸ் தள இளவரசியின் விமானப்படை பைலட் சீருடையில் இருந்த புகைப்படமும் பகிரப்பட்டிருந்தது. தற்போது அந்தப் படத்தை எடுத்துத்தான் போலிச் செய்தியைப் பரப்புவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ராயல் ஜோர்டானிய விமானப் படையில் முதல் லெப்டினென்ட் ஆன இளவரசி சல்மா, 2020இல் தனது நாட்டின் முதல் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றார். இளவரசர் இரண்டாம் அப்துல்லாவின் மூன்றாம் மகளான சல்மா பின்ட் அப்துல்லா, அந்நாட்டின் ராயல் விமானப் பயிற்சி மையத்தில் விமானப் பயிற்சிப் படிப்பை 2019 நவம்பர் மாதம் நிறைவுசெய்தார். கடந்த ஆண்டு டிசம்பரில், இளவரசி சல்மா காசா மருத்துவமனைக்கு விமானம் மூலம் உதவி செய்ய அனுப்பப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்தார்.