அமெரிக்க அதிபர் தேர்தலைப்போல அமெரிக்க இடைத்தேர்தலிலும் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக கூறி 30 பேஸ்புக் கணக்குகள் மற்றும் 85 இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேலவையான செனட் சபைக்கும், கீழவையான பிரதிநிதிகள் சபைக்கும் இடைக்காலத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 33 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இது தவிர மாகாண ஆளுநர்களுக்கான தேர்தலும் இணைத்து நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியின் கை ஓங்கி வருகிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாடு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வசம் சென்றுள்ளது. அதே சமயம் செனட் சபையில் ஆளும் குடியரசுக் கட்சி வெற்றியை தக்க வைத்து வருகிறது. இண்டியானா, டெக்சாஸ் மற்றும் வடக்கு டக்கோடாவில் குடியரசுக் கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலைப்போல அமெரிக்க இடைத்தேர்தலிலும் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக கூறி 30 பேஸ்புக் கணக்குகள் மற்றும் 85 இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது சமூக வலைத்தளங்கள் மூலம் ஜனநாயக கட்சிக் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலிலும் போலியான பேஸ்புக் கணக்குகள் உருவாக்கப்பட்டு முறைகேடு நடந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உளவுத் துறை கொடுத்த புகாரின் அடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்ட 30 பேஸ்புக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டது. இதே போல் இன்ஸ்டாகிராமிலும் 85 போலி கணக்குகள் இருப்பதையும் பேஸ்புக் நிறுவனம் கண்டுபிடித்து முடக்கியது.