டொனால்டு ட்ரம்ப் முகநூல்
உலகம்

ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம்! அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

PT WEB

அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இன்னும் 5 மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், மீண்டும் வெள்ளை மாளிகையை கைப்பற்ற வேண்டுமென ட்ரம்ப்பின் கனவிற்கு நியூயார்க் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முட்டுக்கட்டையை போட்டுள்ளது.

டொனால்டு ட்ரம்ப்

தன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சை சமாதானப்படுத்த ட்ரம்ப் அவருக்கு பணம் கொடுத்ததாகவும், இதுதொடர்பான பணபரிவர்த்தனையை மறைப்பதற்காக போலி வணிகப் பதிவுகளை மேற்கொண்டதாகவும் ட்ரம்ப் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ட்ரம்ப்பிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அவர் குற்றவாளி என்றும் நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஜூலை 11ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், தான் ஒரு அப்பாவி எனவும் கூறியுள்ளார்.