உலகம்

தார் பாலைவனத்தில் காணாமல்போன ஆறு... தடயங்கள் கண்டுபிடிப்பு!

தார் பாலைவனத்தில் காணாமல்போன ஆறு... தடயங்கள் கண்டுபிடிப்பு!

Sinekadhara

ஒரு லட்சத்து 72 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிகானேருக்கு அருகிலுள்ள மத்திய தார் பாலைவனத்தின் வழியாக ஓடி காணாமல்போன ஆற்றின் ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இங்கு மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவாக சாதகங்களும் இருந்திருக்கலாம் எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். குவாட்டர்னரி சயின்ஸ் ரிவியூஸ் இதழில் வெளியான கண்டுபிடிப்புகள், இந்த பாலைவனத்தின் நால் குவாரியில் ஆறு ஓடியதற்கான தடயங்களை வெளியிட்டுள்ளன.

ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் சயின்ஸ் ஆஃப் ஹ்யூமன் ஹிஸ்டரி, தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் கொல்கத்தா ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கற்காலத்தில் மக்கள் தார் பாலைவன நிலப்பரப்பில் வாழ்ந்திருப்பதைக் குறிக்கிறது. இந்தப் பாலைவனத்தின் வழியாக ஓடிய நதியின்மூலம், பாலியோலிதிக் மக்களுக்கு ஒரு வாழ்வாதரத்தை வழங்கியிருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.

"தார் பாலைவனம் வரலாற்றுக்கு முந்தைய வேறொரு வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் பாதி வறண்ட இந்த இடத்தில் கற்கால மக்கள் எவ்வாறு தப்பிப்பிழைத்தார்கள் என்பது மட்டுமல்லாமல், எப்படி செழிப்பாக இருந்தார்கள் என்பதற்கும் பலவிதமான ஆதாரங்களை நாங்கள் கண்டுபிடித்து வருகிறோம்" என தி மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் சயின்ஸின் விஞ்ஞானத்தைச் சேர்ந்த ஜிம்போப் பிளிங்க்ஹார்ன் கூறியுள்ளார். மேலும் இங்கு வாழ்வதற்கு ஆறுகள் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். ஆனால் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் நதி அமைப்புகள் எப்படியிருந்தன என்பது குறித்து தெளிவான விவரம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

செயற்கைக்கோள் படங்கள் தார் பாலைவனம் வழியாக ஆறுகள் சென்ற அடர்த்தியான வலையமைப்பைக் காட்டியுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் ஆறுகள் மற்றும் நீரோடைகள் எங்கு பாய்ந்தன என்பதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன, ஆனால் அவை எப்போது என்று சொல்ல முடியாது ”என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹேமா அச்சுதான் விளக்கினார்.

சுமார் 172 மற்றும் 140 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மழைக்காலம் இப்போதுவிட மிக மோசமாக இருந்ததையும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டின. 95 முதல் 78 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் ஆறு ஓடியிருக்கிறது. ஆனால் அதன்பிறகு அந்த இடத்தில் ஒரு ஆறு இருந்ததற்கான சான்றுகள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த நதி தார் பாலைவனத்தில், தெற்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் மனித பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான கால கட்டத்தில் பாய்ந்தது என பிளிங்க்ஹார்ன் கூறியுள்ளார்.