உலகம்

இங்கிலாந்தின் 2-ம் மகாராணியாக எலிசபெத் தேர்வாக காரணமான சம்பவம் இதுதான்! #RarePhotos

இங்கிலாந்தின் 2-ம் மகாராணியாக எலிசபெத் தேர்வாக காரணமான சம்பவம் இதுதான்! #RarePhotos

நிவேதா ஜெகராஜா

நேற்றைய இரவு உடல்நலக்குறைவால் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், இங்கிலாந்தை நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். இங்கிலாந்தின் செல்வாக்கு சரியத் தொடங்கிய காலத்தில் ஆட்சிக்கு வந்த அவர், உலகின் அனைத்து நாடுகளையும் சுற்றி வந்தவர்.

மகாராணி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரக்கூடிய பெயர் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தான். இங்கிலாந்துக்கும், உலகெங்கும் பரவியிருக்கும் அதன் முன்னாள், இன்னாள் காலனி ஆதிக்கப் பிராந்தியங்கள் ஆகியவற்றின் தலைவர்.

எந்த நாட்டிலும் அரசாட்சியில் தலையிடுவதற்கு இவருக்கு உரிமை இல்லை என்றாலும், தன்னுடைய நன்மதிப்பு காரணமாக, அரசின் முடிவுகளை மாற்றக்கூடிய தகுதி படைத்தவர். இங்கிலாந்து அரச பதவியை நீண்டகாலம் வகித்த இரண்டாவது தலைவர் இரண்டாம் எலிசபெத். லண்டனில் பிறந்து, வீட்டிலேயே கல்வி பயின்ற எலிசபெத், தாம் அரசியாவோம் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

1936-ம் ஆண்டில் மன்னராக இருந்த எட்டாம் எட்வர்டு, தனது காதலுக்காக மணிமுடியைத் துறந்ததையடுத்து, அவரது தம்பியும் எலிசபெத்தின் தந்தையுமான ஆறாம் ஜார்ஜுக்கு அரச பதவி கிடைத்தது. இதையடுத்து, இளவரசியானதுடன், அரச பதவிக்கான வரிசையில் முதலிடத்துக்கும் வந்தார் எலிசபெத்.

இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் இளவரசி என்ற வகையில் அரச குடும்பத்தினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அனைத்தையும் செய்தார். போர் முடிந்த பிறகு கிரீஸ் இளவரசரான பிலிப் மௌன்ட்பேட்டனை மணந்தார்.

1952-ம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜார்ஜ் மறைந்த பிறகு அரச பதவி எலிசபெத்துக்கு வந்தது. இதையடுத்து பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளின் மகாராணியாக பதவியேற்றுக் கொண்டார். 1952-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் இதற்கான பிரமாண்டமான விழா நடந்தது. மகாராணியான போது எலிசபெத்தின் வயது 25. போரின் துன்பத்தில் இருந்து மீண்டு கொண்டிருந்த இங்கிலாந்துக்கு அழகான இளமையான ஒரு பேரரசி கிடைத்துவிட்டதாக ஊடகங்கள் கூறின.

சார்லஸ், ஆனி, ஆன்ட்ரூ, எட்வர்ட் ஆகிய நான்கு குழந்தைகளுக்குத் தாயான இரண்டாம் எலிசபெத், எந்த நேரத்திலும் அரசியல் ரீதியான கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்ததில்லை. இங்கிலாந்து தேவாலயத்தின் தலைவர் என்ற முறையில் மட்டும் மத அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்ட அவர், பிற மதத் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.

இதுவரையிலான தனது பதவிக் காலத்தில் ஆறு போப் ஆண்டவர்களைச் சந்தித்திருக்கிறார். உலகம் முழுவதும் சுமார் 600 தன்னார்வ அமைப்புகளில் அங்கமாக இருந்தவர் மகாராணி எலிசபெத்.