உலகம்

'இது தாமதிக்கும் தருணமல்ல...' - கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரமும், இந்திய நிலையும்!

'இது தாமதிக்கும் தருணமல்ல...' - கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரமும், இந்திய நிலையும்!

நிவேதா ஜெகராஜா

உலக வர்த்தக நிறுவனத்தால் கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமைக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டாலும், இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேவேளையில், தடுப்பூசி உற்பத்தி விவகாரத்தில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. 

கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்புக் கவசங்கள் போன்றவை மீதான உலக வர்த்தக நிறுவனத்தின் காப்புரிமைகளின் மீது தற்காலிக தடை விதிக்கக் கூறி, உலக வர்த்தக நிறுவனத்திடம் தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு, சமீபத்தில் அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. 

அமெரிக்கா ஆதரவளித்ததோடு, பிற நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. எவ்வளவு விரைவாக ஒப்புதல் அளிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக அளிக்கச் சொல்லி அறிவுறுத்தியிருந்தது அமெரிக்கா. 

அமெரிக்க அரசு மட்டுமன்றி, 59 சதவிகித அமெரிக்க வாக்காளர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே சொல்கிறது. கொரோனா போன்ற உயிர்க் காக்கும் நோய்களுக்கான மருந்துகள் அனைத்துக்குமே காப்புரிமை தடை செய்யலாம் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஆதரவு பற்றி, உலக வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர் பேசும்போது, "உலக நாடுகள் விரைந்து இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், உலகம் முழுக்க மக்கள் இறந்துக்கொண்டிருக்கின்றனர்" எனக் கூறியிருந்தார்.

தடுப்பூசி மீதான இந்தக் காப்புரிமைக்கான தற்காலிக தடை விதிக்கும் கோரிக்கையை, மருந்து உற்பத்தியாளர்கள் சிலர் எதிர்த்து வந்தனர். அவர்கள் இதுபற்றி பேசுகையில், "சில நாடுகளுக்கு காப்புரிமை கிடைத்தாலும், மருந்துத் தயாரிப்புக்குத் தேவையான மூலக்கூறுகள் தேவையான அளவு அவர்களிடம் இருக்காது. மேலும் தொழில்நுட்ப உதவியும் இருக்காது. இந்த தொழில்நுட்ப உதவி, மூலக்கூறுகள் போன்றவையெல்லாம் கிடைக்க வெகுகாலம் ஆகும். அப்படியிருக்கும்போது, காப்புரிமையை தற்காலிகமாக தடை செய்வதால், பெருமளவில் லாபம் இருக்காது" எனக் கூறினர்.

இந்நிலையில், மிகப்பெரும் மருந்து நிறுவனமான பைசர் நிறுவனம், இந்தத் தடுப்பூசி காப்புரிமை தடைக்கால சட்டத்துக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் என உறுதியாக கூறியுள்ளது. வரும் நாள்களில், பைசர் போல வேறு எத்தனை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆதரவு இல்லை எனக் கூறும் என்பதும் தெரியவில்லை.

ஒருசில மருந்து உற்பத்தி நிறுவனர்களை சேர்ந்த நிபுணர்கள், 'இந்த தடை விதிக்கப்பட்டாலும், அது மிகப்பெரிய ஒரு பாதைக்கான மிகச் சிறு தொடக்கம்தான்' எனக் கூறிவருகின்றனர். இதை அவர்கள் சொல்லக் காரணம், காப்புரிமை தடை மட்டுமே, மருந்து உற்பத்தியில் கிடையாது' என்ற கருத்தை முன்னிறுத்திதான்.

காப்புரிமை தடையை தாண்டி, தொழில்நுட்ப நுணக்கங்கள், தொழில்நுட்ப வசதிகள், தடுப்பூசி உற்பத்தி செய்ய தேவையான வசதிகள் போன்றவையும் வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, காப்புரிமை தடை குறித்து, தெளிவான பார்வையோடு, அதை ஆதரிக்கும் நாடுகள் முன்வர வேண்டும் என சொல்லப்படுகிறது. எவ்வளவு விரைந்து செய்கிறோமோ, அவ்வளவு விரைந்து, சூழலை எதிர்கொள்ள முடியும் என கூறுகின்றனர் நிபுணர்கள்.

இந்தியாவில் அதிவேக மற்றும் அதிகளவு தடுப்பூசி தயாரிப்புக்கான வசதிகள் இருப்பதால், இந்தியா இந்தச் சூழலை சிறப்பாக எதிர்கொள்ளும் என நம்பப்படுகிறது.