வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன், ராணுவ முப்படை தளபதிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பாகுபாட்டுக்கு எதிரான மாணவர் புரட்சி அமைப்பின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபின், நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமரான கலிதா ஜியா 2020 ஆம் ஆண்டு முதல் வீட்டுச்சிறையில் உள்ள நிலையில், அவரை விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் தற்போது வரை போராட்டங்களில் ஈடுபட்டவர்களை விடுவிக்கவும் அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து புதிதாக தேர்தல் நடத்த வழி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, வங்கதேசத்தில் வெடித்த கலவரங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது. இதில் 100 பேர், ஹஸீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு கொல்லப்பட்டவர்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹஸீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறிவைத்து கொல்லப்படுவதால் பதற்றம் நீடிக்கிறது. அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரால் மேற்கு ஜோஷோர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஹோட்டல் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 24 பேர் கொல்லப்பட்டனர். வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அவாமி லீக் கட்சியின் எம்பியுமான முஷ்ரஃபி மோர்தசா வீட்டுக்கும் தீவைக்கப்பட்டது.
இந்நிலையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், மக்களின் உயிர்கள், உடமைகளுக்கு தீங்கு வராமல் பாதுகாக்கவும் திங்கட்கிழமை (நேற்று) இரவு அதிபர் முகமது ஷஹாபுதீன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பத் தொடங்கியிருக்கிறது.
தலைநகர் டாக்காவை பொறுத்தவரை, முந்தைய நாளின் வன்முறைகள், கலவரங்களின் அறிகுறிகள் இல்லாமல் அமைதியாக காட்சியளித்தது. கடைகள் திறக்கப்பட்டன. பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின. கலவரங்களால் மூடப்பட்ட கல்விநிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், வங்கதேசத்தில் உள்ள அவாமி லீக் கட்சியினரும், ஹஸீனா ஆட்சியில் இடம்பெற்றவர்களுக்குமான நெருக்கடி நீடிக்கிறது. ஹஸீனா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த ஜூனைத் அகமது, வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்வதற்காக டாக்கா விமானநிலையத்தில் காத்திருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது வரை இடைக்கால அரசு குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகாத நிலையில், வங்கதேசத்தில் நீடிக்கும் சூழலை உலக நாடுகள் உற்று கவனித்துவருகின்றன.