உலகம்

சீனா சென்றார் பிரதமர் மோடி

சீனா சென்றார் பிரதமர் மோடி

rajakannan

இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘பிரிக்ஸ்’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை சந்தித்து பேசுவது வழக்கம். உலகளாவிய பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ள இந்த மாநாட்டில் பேசப்படும்.

பிரிக்ஸ் அமைப்பில் இல்லாத எகிப்து, கென்யா, மெக்ஸிகோ, தஜிகிஸ்தான் மற்றும் தாய்லாந்து நாடுகளின் தலைவர்களுக்கும் விருந்தினர்களாக பங்கேற்க சீன அதிபர் அழைப்பு விடுத்து இருந்தார். கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை கோவாவில் இந்தியா நடத்தியது. அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு சீனாவின் சியாமென் நகரில் இன்று முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் புது டெல்லியில் தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். சீனாவில் 3 நாள் பயணம் மேற்கொள்ளும் மோடி பிரிக்ஸ் மாநாட்டின் இடையே சீன அதிபரை சந்தித்து பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சீனா சென்ற மோடிக்கு அந்நாட்டு அதிகாரிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே, சீனா வாழ் இந்தியர்களை சியாமென் நகரில் மோடி சந்தித்தார். சீன வாழ் இந்தியர்கள் சார்பில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சீனா பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, வரும் 5 ஆம் தேதி மியான்மர் நாட்டுக்கு செல்கிறார். இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதன்முதலாக மியான்மர் நாட்டுக்கு செல்லும் அவர் வரும் 7 ஆம் தேதிவரை அங்கு தங்குகிறார்.