உலகம்

நடந்தவரை போதும்!மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவாருங்கள் சார்லஸ்! வானளாவிய அதிகாரங்கள் ஏன்?

நடந்தவரை போதும்!மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவாருங்கள் சார்லஸ்! வானளாவிய அதிகாரங்கள் ஏன்?

ச. முத்துகிருஷ்ணன்

கடந்த காலங்களில் கோலோச்சிய மன்னராட்சியின் எச்சங்களை எல்லாம் உதறிதள்ளிவிட்டு 20 ஆம் நூற்றாண்டில் மாறிய மக்கள் மனநிலையை புரிந்துகொண்டு பிரிட்டன் மன்னர்கள் தங்கள் நாட்டிலும் மக்களாட்சிக்கு வழிவிட்டனர். ஆனால், அதன் கடிவாளத்தை தங்கள் கைகளில் இறுகப் பற்றிக் கொள்ளுமாறு பார்த்துக்கொண்டார். பிரதமர் பதவிவரை மக்களாட்சி! அதற்கு மேல் மன்னராட்சி! என புது வித ஆட்சியை அறிமுகம் செய்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் அதை வெற்றிகரமாக நடத்தியும்விட்டனர். 

மக்களாட்சி யுகத்திலும் மன்னராட்சி நீடிக்கும் விநோத தேசம்:

நமது நாட்டைப் போலவே இங்கிலாந்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு அவர்களால் பிரதம அமைச்சர் தேர்வு செய்யப்படுவார். இந்தியாவில் நாடாளுமன்றத்தில் இரு அவைகள் செயல்படுகிறதே, அது கூட இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் இருந்து பிரதி எடுக்கப்பட்டதே. நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் பல முடிவுகளுக்கு பிரமாண்ட பொது வாக்கெடுப்பு நடத்தி அதன்படி முடிவெடுக்கும் தேசம் பிரிட்டன். பிரெக்ஸிட் உள்ளிட்ட சம்பவங்கள் அதற்கு ஓர் உதாரணம் ஆகும். ஆனால் இப்படி மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அங்கு இருக்கும்போதிலும், மக்கள் பல முடிவுகளுக்கு வாக்கெடுப்பில் பங்கேற்கும் போதிலும், பிரிட்டன் ஒரு குடியாட்சி நாடல்ல! மன்னராட்சி நடைபெறும் ஒரு முடியாட்சி நாடுதான்!

21 ஆம் நூற்றாண்டிலும் மன்னராட்சியா?

தொழிற்புரட்சி 19 ஆம் நூற்றாண்டில் வேகமெடுக்கும் முன்னரே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மன்னருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து மக்களாட்சி மலரத் துவங்கியது. 20 ஆம் நூற்றாண்டில் உலகப் போர்கள் நடக்கும்போது பல நாடுகள் மக்களாட்சிக்கு தங்கள் கதவுகளை திறந்தன. அரியணையில் இருந்த மன்னர்கள் வீழ்த்தப்பட்டார்கள் அல்லது விலகும்படியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்படி தொழிற்புரட்சியில் மிக வேகமாக வளர்ச்சியடைந்த பிரிட்டன் மன்னர்கள், மாறும் மக்கள் மனநிலையை புரிந்துகொண்டு தங்கள் நாட்டிலும் மக்களாட்சிக்கு வழிவிட்டனர். ஆனால் அதன் கடிவாளத்தை தங்கள் கைகளில் இறுகப் பற்றிக் கொள்ளுமாறு பார்த்துக்கொண்டார். பிரதமர் பதவிவரை மக்களாட்சி! அதற்கு மேல் மன்னராட்சி! என புதிய வித ஆட்சியை அறிமுகம் செய்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் அதை வெற்றிகரமாக நடத்திவிட்டனர். கடைசியாக அந்த மகுடத்தை தலையில் ஏந்தி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு மகாராணியாக திகழ்ந்தவர்தான் இரண்டாம் எலிசபெத்!

இங்கிலாந்து மகாராணியின் வானளாவிய அதிகாரங்கள்:

1. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உலகில் எந்த நாட்டிற்கும் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை. ஏனென்றால் இங்கிலாந்தில் வசிக்கும் குடிமக்கள் அனைவருக்கும் ராணியின் பெயராலேயே பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வந்தது. இனி அது அரசர் மூன்றாம் சார்லஸ் பெயரால் வழங்கப்பட உள்ளது.

2. மேலும் மகாராணி கார் ஓட்ட ஓட்டுநர் உரிமமும் தேவையில்லை. ஏனென்றால் இங்கிலாந்தில் வசிக்கும் குடிமக்கள் அனைவருக்கும் ராணியின் பெயராலேயே ஓட்டுநர் உரிமமும் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் இனி அரசர் மூன்றாம் சார்லஸ் பெயரால் வழங்கப்படும்.

3. இங்கிலாந்து மகாராணி அந்த ஒற்றை நாட்டுக்கு மட்டும் ராணி அல்ல. ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பெலிஸ், கனடா, கிரெனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சாலமன் தீவுகள், துவாலு மற்றும் இங்கிலாந்து என 15 நாடுகளுக்கு பேரரசி அவர்தான். இனி இந்த அனைத்து நாடுகளும் அரசர் மூன்றாம் சார்லஸின் ஆளுகைக்கு கீழ் செல்லும்.

4. இந்த நாடுகளுக்கு பெயரளவில் மட்டும் ராணியாக எலிசபெத் இல்லை. மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளிலும் ராணிக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. அந்த நாடுகளில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய அரசை அமைக்கவோ ஆட்சியில் இருக்கும் அரசைக் கலைக்கவோ ராணிக்கு முழு அதிகாரமும் உண்டு. இனி இந்த அதிகாரம் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கும் பொருந்தும். ஆஸ்திரேலியாவில் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணி கலைத்த நிகழ்வு ஒன்றும் உண்டு.

1975 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அரசியல் அசாதாராண சூழல் நிலவியபோது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி, கவர்னர் ஜெனரல் சர் ஜான் கெர், பிரதமரை ராணியின் பெயரால் பதவி நீக்கம் செய்தார். அவருக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக நியமித்தார், அவர் அரசாங்கத்திற்கு நிதியளிக்கும் செலவின மசோதாவை உடனடியாக நிறைவேற்றினார். மூன்று மணி நேரம் கழித்து, கெர் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர் பதவிகளையும் கலைத்தார். பின்னர் ஆஸ்திரேலியாவில் தேர்தல் நடைபெற்று புதிய அரசு பதவியேற்றது. இந்த சம்பவம் தவிர மகாராணியின் பெயரைச் சொல்லி வேறு எந்த அரசும் கலைக்கப்படவில்லை.

5. மேலும் அந்த நாடுகளில் வேண்டிய நிலப்பரப்பை தனதாக்கிக் கொள்ளும் உரிமையும் மகாராணிக்கு உண்டு. ஆனால் அது மாதிரியான எந்த உரிமைகளையும் மகாராணி தன் வாழ்நாளில் பயன்படுத்தியதில்லை.

6. இங்கிலாந்தில் ஹவுஸ் ஆஃப் காமன் மற்றும் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் எனும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ராணியின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக இயலாது. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை முழுவதுவாக நிராகரிக்கும் உரிமை ராணிக்கு உண்டு. ஆனால் இரண்டாம் எலிசபெத் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றிய சட்டங்களை நிராகரித்தது இல்லை. ஆனால் சட்டங்களில் உள்ள விஷயங்கள் குறித்து அப்போதைய பிரதமர்களிடம் விவாதம் நடத்தி இருக்கிறார்.

7. எந்த நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பினால் ராணி யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் போர் பிரகடனத்தை செய்யலாம். ஆனால் இரண்டாம் எலிசபெத் அவ்வாறு ஒரு போர் பிரகடனத்தைக் கூட செய்ததில்லை.

8. நீதிமன்றங்களில் ராணியின் மீது யாரும் வழக்கு தொடர முடியாது. அதேபோல் பிற வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டிய அவசியமும் கிடையாது.

9. பிரிட்டன் மகாராணி வரி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. இருப்பினும் இரண்டாம் எலிசபெத் தாமாக முன்வந்து இங்கிலாந்து அரசுக்கு வரிசெலுத்தும் நடைமுறையை துவக்கினார். அதை மூன்றாம் சார்லஸ் பின்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

10. தனது ஆளுகைக்குட்பட்ட நாடுகள் சுதந்திரம் அல்லது குடியரசு அந்தஸ்து கோரும்போது அப்பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப முடிவெடுத்த பெருமையும் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உண்டு. ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் குடியரசு அந்தஸ்து கோரி வரும் நிலையில், சார்லஸ் எந்த மாதிரியான முடிவெடுக்க போகிறார் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிகாரங்களை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புண்டு?!

ராணிக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை உன்னிப்பாக கவனித்தால், அவற்றை வைத்து ஒரு கொடுங்கோல் ஆட்சியை நடத்திவிடலாம் என்பதை புரிந்துகொள்ளலாம். எலிசபெத் அவற்றை தவறாக பயன்படுத்தவில்லை எனும்போதிலும் இனி வரும் அரசர் அல்லது அரசி அதை தவறாக பயன்படுத்த எல்லா வாய்ப்புகளும் இருப்பதை மறுக்க இயலாது. அவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டால் அதை எதிர்த்து கேள்வி கூட கேட்க முடியாத நிலைக்கு உலகின் முக்கியமாக சில தேசங்கள் சென்றுவிடும். தலைக்கு மேல் வெள்ளம் சென்றுவிட்ட பின் புலம்பி என்ன பயன் இருக்க முடியும்?

அதிகாரங்களை தியாகம் செய்யுங்கள் - மக்களாட்சிக்கு வழிவிடுங்கள்!

இவ்வளவு ஆபத்தான அந்த அதிகாரங்களை அந்த நாட்டின் மக்கள் பிரதிநிதிகளால் கூட தடுக்க இயலாத நிலையே நீடிக்கிறது. அவர்கள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ராணியிடம் தான் இருக்கிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய இரண்டாம் எலிசபெத் ஆபிரகாம் லிங்கனின் புகழ்பெற்ற “மக்களால், மக்களுக்காக, மக்களே செய்யும் ஆட்சி மக்களாட்சி” எனும் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். அதன் அர்த்தத்தை இனியாவது முழுமையாக உணர்ந்து, வருங்கால அபாயத்தை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அரச குடும்பம் தங்கள் அதிகாரங்களை துறந்து பூரண மக்களாட்சிக்கு தங்கள் தேசத்தை இட்டுச் செல்வதே அவர்களுக்கும் நல்லது! அந்த நாட்டுக்கும் நல்லது!