உலகம்

10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்

10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்

ச. முத்துகிருஷ்ணன்

10 மாதங்களுக்கு முன் ஆற்றில் தொலைத்த ஐபோனை கண்டெடுத்தபோது, அந்த ஐபோன் வழக்கம்போல வேலை செய்ததால் அதன் உரிமையாளர் ஆச்சரியம் அடைந்துள்ளார்.

10 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆற்றில் தொலைபேசியை தொலைத்துவிட்டு, ஒரு வேளை அது மீண்டும் கண்டெடுக்கப்பட்டாலும் அது வேலை செய்யும் நிலையில் இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். நம்பமுடியாததாகத் தெரிகிறது, இல்லையா? இது நம் கற்பனையல்ல, உண்மைச் சம்பவம்.

இங்கிலாந்தை சேர்ந்த ஓவைன் டேவிஸ் தனது ஐபோனை ஆகஸ்ட் 2021 இல் இளங்கலை விருந்தின் போது சின்டர்ஃபோர்ட் அருகே உள்ள வை நதியில் தொலைத்தார். தேடிப்பார்த்தும் அவரால் ஐபோனை திரும்பக் கண்டுபிடிக்க இயலாமல் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர், ஏறக்குறைய பத்து மாதங்களுக்குப் பிறகு, அதே ஆற்றில் தனது குடும்பத்துடன் மிகுவல் பச்சேகோ என்பவர் படகில் பயணம் செய்யும் போது, டேவிஸின் ஐபோனைக் கண்டார். ஆற்றில் இருந்து தொலைந்த ஐபோனை எடுத்தார்.

ஃபோன் ரீஸ்டார்ட் ஆகாது என்று தெரிந்திருந்தும், அதில் "சென்டிமென்ட்" விஷயங்கள் இருந்திருக்கலாம் என்று நினைத்ததால், ஃபோனை உலர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும், அவர் சாதனத்தை இயக்கியபோது, அவரது கண்கள் பார்த்ததை அவரால் நம்ப முடியவில்லை. ஃபோன் சார்ஜரில் இருந்து மின்சாரத்தை பெற்று சார்ஜ் ஆக தொடங்கியது, அவர் அதை இயக்கியபோது, வால்பேப்பராக ஆகஸ்ட் 13 தேதியுடன் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் ஸ்கிரீன்சேவரைக் கண்டார்.

தொலைந்து போன ஐபோன் பற்றி அந்த புகைப்படத்துடன் மிகுவல் பச்சேகோ முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவு 4000 முறை பகிரப்பட்டது, ஆனால் ஐபோனை தொலைத்த டேவிஸ் சமூக ஊடகங்களில் இல்லை. இருப்பினும், அவரது நண்பர்கள், தொலைபேசியை அடையாளம் கண்டு, பச்சேகோவுடன் தொடர்புகொள்ள டேவிஸுக்கு உதவினார்கள். இதையடுத்து ஆற்றில் விழுந்த தனது ஐபோனை 10 மாதங்களுக்கு பின் வழக்கம்போல வேலை செய்யும் நிலையில் பெற்றுக் கொண்டார் டேவிஸ்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபோன்கள் அனைத்தும் IP68 மதிப்பீட்டில் உள்ளன. அதாவது 1.5 மீட்டர் ஆழத்தில் சுத்தமான தண்ணீரில் 30 நிமிடங்களுக்கு ஐபோன்கள் உயிர்வாழ முடியும். ஆனால் 10 மாதங்கள் தாக்குபிடித்தது ஒரு அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.