அமெரிக்காவின் 47ஆவது அதிபராக, டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய பதவியேற்புக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவருடைய தேர்தல் வெற்றிக்குப் பெரும் பங்காற்றிய அவரது நெருங்கிய நண்பரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க்கின் பங்குகள் ஒரேநாளில் உச்சம் தொட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்ட நிலையில், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் விலை உயர்ந்துள்ளது. அவரது நிறுவனமான டெஸ்டாவின் பங்குகள் சுமார் 14.75% வரை அதிகரித்துள்ளன. அமெரிக்க பங்குச்சந்தையில் டெஸ்லா பங்கு ஒன்று 288.53 டாலராக உயர்ந்தது. டெஸ்லா பங்கு விலை அதிகரித்ததை அடுத்து எலான் மஸ்க் சொத்து மதிப்பு ஒரேநாளில் ரூ.2.19 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. அதன்படி, எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 24.46 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ட்ரம்பின் வெற்றியால் எலான் மஸ்க் மட்டுமின்றி, உலகின் இரண்டாவது பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 7.14 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 228 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான கொள்கைகள் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் பங்குவிலை இவ்வாறு அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் மீண்டும் போட்டியிட்ட ட்ரம்பிற்கு எலான் மஸ்க் மிகவும் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தார். அவருடைய பிரசாரத்துக்கு ஏதுவாக 375 கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நிதியும் வழங்கினார். தவிர, தேர்தலுக்கு முதல் நாள் வரை, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ட்ரம்ப்விற்கு ஆதரவாகவே பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
இதையும் படிக்க: ”ட்ரம்ப் தான் எனது தந்தை” - வைரலாகும் பாகிஸ்தான் இளம்பெண் பேசிய வீடியோ! உண்மை என்ன?
இதையடுத்து அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றபின்பு உரையாற்றிய ட்ரம்ப், “என்னுடைய இந்த வெற்றியில் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் பங்கு முக்கியமானது. அவர் ஒரு ஜீனியஸ். நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அது நம் பொறுப்பு” எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய ட்ரம்ப், ”தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எலான் மஸ்கிற்கு அமைச்சர் பதவி அல்லது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி கொடுப்பேன்” என உறுதி அளித்திருந்தார். அவருடைய இந்த வரவேற்புக்கு, எலான் மஸ்க்கும் வரவேற்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான் அவருடைய சொத்து மதிப்பு எகிறியுள்ளது. தவிர, டொனால்டு ட்ரம்புவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் எலான் மஸ்க் நிறையப் பயனடையக் கூடும் எனப் பலரும் கருதுகின்றனர்.