எலான் மஸ்க், மோடி ட்விட்டர்
உலகம்

எலான் மஸ்க்கின் இந்திய பயணம்.. திடீர் தள்ளிவைப்பு! இதுதான் காரணமா?

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளராக இருப்பவர், எலான் மஸ்க். இவருடைய டெஸ்லா நிறுவனம், சா்வதேச அளவில் மின்சார வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவையும் சந்தையும் விரிவடைந்து செல்வதை பயன்படுத்திக்கொள்ள எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, ஏப்ரல் 21, 22ஆம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமா் மோடியைச் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்வது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளவிருந்தார். இதுகுறித்து கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த எலான் மஸ்க், ”இந்தியாவில் பிரதமருடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன்” எனப் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே, அவரது பயணம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: “என் மனைவி உணவில் டாய்லெட் கிளீனர்” - குற்றஞ்சாட்டிய இம்ரான் கான்; பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்டது தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், “துரதிருஷ்டவசமாக, மிகக் கடுமையான டெஸ்லா பணிகள் காரணமாக எனது இந்திய பயணம் ஒத்திவைக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டுக்குள் இந்திய பயணத்தை மேற்கொள்வேன். அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மின்சார கார்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, ஏற்கெனவே ஜெர்மனியில் உள்ள தனது ஆலையில் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன. இவை விரைவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனத் தெரிகிறது. கடந்த மாதம் மின்சார வாகன இறக்குமதி வரியை 100 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக இந்திய அரசு குறைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லி மற்றும் மும்பையில் டெஸ்லாவின் கார் ஷோரும்கள் அமைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இடங்களை, டெஸ்லா நிர்வாகிகள் கடந்த மார்ச் மாதம் தீவிரமாகத் தேடியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: மசூதியை நோக்கி அம்புவிடும் சைகை சர்ச்சை... வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளரை புறக்கணித்த மக்கள்! #Video