உலகம்

`பாருங்க... இங்க எங்கே வேணாலும் நீங்க தூங்கலாம்...’- ட்விட்டர் ஆஃபிஸூக்குள் தங்கும் அறை!

`பாருங்க... இங்க எங்கே வேணாலும் நீங்க தூங்கலாம்...’- ட்விட்டர் ஆஃபிஸூக்குள் தங்கும் அறை!

நிவேதா ஜெகராஜா

ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க், ட்விட்டர் அலுவலத்தில் இதுவரை  மேற்கொண்ட மாற்றங்களெல்லாம் போதாதென, ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மாற்றங்களை ஏற்படுத்திவருகிறார். அதுவும் இந்த உலகம் யோசிக்காத இன்னொரு வழியில் சென்று யோசிப்பதே எலானின் வழக்கமாக உள்ளது. அப்படித்தான் இம்முறையும் செய்திருக்கிறார். அதாவது, உலகமே வீட்டை ஆஃபிஸாக மாற்றிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்… மஸ்க் ஆஃபிஸை வீடாக மாற்றும் நோக்கத்தில் அலுவலகங்களில் படுக்கையறைகளை உருவாக்கிவருகிறார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர், எலான் மஸ்க் தனது ஊழியர்களிடம் `இனி நீங்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தயாராக இருங்கள்’ என்று கூறியிருந்தார். கடுமையாக என்பது, அதிக வேலை நேரத்தை குறிப்பிடுவது மற்றும் அலுவலகத்திலேயே தங்கி வேலை செய்வது போன்றவற்றை குறிக்கும் என மஸ்க் குறிப்பிட்டார் என தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக மஸ்க் தனது ஊழியர்களுக்கு “மிக மிக கடுமையாக உழைக்க வேண்டிருக்கும். குறைந்தபட்சம் 40 மணி நேரமாவது உழைக்க வேண்டியிருக்கும். இனி வீட்டிலிருந்தே பணி கிடையாது” உள்பட பல விஷயங்களை குறிப்பிட்டு மெயில் அனுப்பி ஒப்புதல் வாங்கியிருந்தார் என சொல்லப்பட்டது. இச்சம்பவம், ட்விட்டரில் ஊழியர்கள் பலரும் கொத்தாக ராஜினாமா செய்ய வழிவகுத்தது. இருந்தாலும் அதுபற்றியெல்லாம் மஸ்க் கவலைகொண்டதாக தெரியவில்லை. அவர் தன் வழியில் கிடுகிடுவென ஏற்பாடுகளை செய்துவருகிறாராம்! அந்தவகையில், சான் ஃப்ரான்ஸிஸ்கோவிலுள்ள ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் படுக்கையறைகளை தயாரித்து வருகின்றாராம் மஸ்க்! 

நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) வீக்-எண்ட் முடித்துவிட்டு அலுவலகத்துக்கு திரும்பிய ஊழியர்கள் சிலர், திடீர் படுக்கையறைகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபற்றி உள்ளூர் ஊடகங்களில் அவர்கள் “படுக்கையறைக்குள் மோசமான மெத்தைகள், மந்தமான திரைச்சீலைகள் மற்றும் மிகப்பெரிய கான்ஃபெரன்ஸ் ரூம், டெலிபிரசன்ஸ் மானிட்டர்கள் போன்றவை உள்ளன” என்றுள்ளனர். முன்னதாக ட்விட்டரின் ப்ராடக்ட் லீட் எஸ்தெர் என்பவர், அந்த படுக்கையறையில்  உறங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடக்கத்தக்கது. இதுதான் இப்பிரச்னை வெளியில் தெரிய தொடங்கியது.

அலுவலகத்தில் படுக்கையறை அமைக்கப்படுவது குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்கின்றனர் ட்விட்டர் ஊழியர்கள். அவர்கள் கூறியுள்ளவற்றில் ”இதன் தோற்றம் நன்றாக இல்லை. இது அவமரியாதையின் சொல்லப்படாத அடையாளம். எங்களிடம் விவாதமே இல்லை. நேரடியாக, படுக்கைகளை வைத்துவிட்டனர்” என்றுள்ளார்கள். இது மீண்டும் ஊழியர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.