எலான் மஸ்க், கமலா ஹாரீஸ் எக்ஸ் தளம்
உலகம்

கமலா ஹாரீஸ் குரலில் AI வீடியோ.. எலான் மஸ்க் பகிர்வு.. சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்!

Prakash J

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் களத்தில் இருந்தனர். இதில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள், முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாக பார்க்கப்பட்டன.

குறிப்பாக, பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் மீது மர்ம நபர் தாக்கிய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர் தப்பிப் பிழைத்தது பெரிய அளவில் பேசுபொருளானது. இதனால், ட்ரம்புக்கு ஆதரவு அலையும் அதிகரித்தது. இந்தச் சூழலில் ஏற்கெனவே வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்டவற்றால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் ஜனநாயக கட்சி வேட்பாளரிலிருந்து அதிபர் ஜோ பைடனை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இதையடுத்து, ஜோ பைடனே, துணை அதிபரும் இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவித்தார். இதன் காரணமாக, அமெரிக்க அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது டொனால்டு ட்ரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரீஸுக்கு, கருத்துக்கணிப்புகளும் சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: “சக்கரவியூகத்தில் 6 பேர்” - பட்ஜெட் விவாதத்தில் பாஜக அரசைக் கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!

தவிர, ஒரு வாரத்தில் அதிக நிதி திரட்டிய சாதனையிலும் இடம்பிடித்துள்ளார். என்றாலும், அவர் இதுவரை அக்கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

கமலா ஹாரீஸ்

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் பேசியதைப் போன்று செயற்கை நுண்ணறிவால் (ஏ.ஐ) தயாரிக்கப்பட்ட போலி வீடியோவை டெஸ்லா நிறுவனரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘இது அற்புதமாக இருக்கிறது’ எனவும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ட்ரம்ப்புடன் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு “ஜோ பைடனின் முதுமை அம்பலப்படுத்தப்பட்டதால் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆகிய நான் தேர்தலில் நிற்கிறேன்” என கமலா ஹாரிஸ் கூறுவதுபோல ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 59 வயதான கமலா ஹாரிஸை ‘பன்முகத்தன்மையின் கூலி’ எனவும், அவர் ஒரு பெண் மற்றும் கருப்பினத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் கமலா ஹாரிஸுக்கு முதல் விஷயமாக நாட்டை வழிநடத்தத் தெரியாது என அவரே சொல்வதுபோல போலியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவால் ஏற்பட இருக்கும் வீடியோக்கள் அமெரிக்க தேர்தல் களத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக கமலா ஹாரீஸ் தரப்பில், “அமெரிக்க மக்களுக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் வழங்கும் உண்மையான சுதந்திரம், வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு மட்டுமே தேவைப்படும் என நம்புகிறோம். எலான் மஸ்க், டொனால்ட் ட்ரம்ப் வழங்கும் போலியான, சித்தரிக்கப்பட்ட பொய்கள் அவர்களுக்கு வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சாவர்க்கர் சர்ச்சை கருத்து| வரலாற்றைத் திரித்ததாக விமர்சனம்.. மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுதா கொங்கரா