உலகம்

‘அதிசயங்களை எல்லாம் என்னால் செய்ய முடியாது’ - கோககோலா விவகாரத்திற்கு எலான் மஸ்க் விளக்கம்

‘அதிசயங்களை எல்லாம் என்னால் செய்ய முடியாது’ - கோககோலா விவகாரத்திற்கு எலான் மஸ்க் விளக்கம்

சங்கீதா

கோககோலாவை வாங்க உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், பின்னர் அது நகைச்சுவைக்காக செய்தது என விளக்கம் அளித்துள்ளார்.

டெஸ்லா மின்சார கார், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி சேவை நிறுவனம் என தொழில்துறையில் அதிவேக முன்னேற்றம் கண்டு வரும் தொழிலதிபர் எலான் மஸ்க், ட்விட்டர் சமூக ஊடகத்தை வாங்கி, உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக திகழும் எலான் மஸ்க், அடுத்து கோககோலாவை வாங்க திட்டமிட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். கோககோலாவை வாங்கி அதில் கொகைனை சேர்க்கப்போவதாகவும், மஸ்க் தெரிவித்ததிருந்தார்.

இதைப்பற்றி பல ஊகங்கள் எழுந்த நிலையில், மெக்டோனால்டு நிறுவனத்தை வாங்கி அங்கு பழுதாக உள்ள ஐஸ்கிரீம் இயந்திரங்களை சரி செய்யப்போவதாக, ஏற்கெனவே தாம் செய்திருந்த பதிவை மேற்கோள் காட்டி ஒரு பதிவிட்டார்.

தம்மால் அதிசயங்களை செய்ய முடியாது என பதிவிட்டு தாம் கோககோலாவை வாங்கப்போவதாக சொன்னது நகைச்சுவைதான் என உணர்த்தியுள்ளார் எலான் மஸ்க். அதே நேரம் ட்விட்டரை பொழுதுபோக்கு நிறைந்த ஒன்றாக மாற்ற முடியும் என உறுதி தருவதாகவும் எலான் மஸ்க் பதிவிட்டிருக்கிறார்.

ட்விட்டரை கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான சமூக தளமாக மாற்றப்போவதாக மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் அது இருக்கும் எனவும் கூறியுள்ளார். வருங்காலங்களில் ட்விட்டர் எப்படி இருக்கும் என காட்டும் டிரெய்லரே எலான் மஸ்க்கின் தற்போதைய பதிவு என கருதப்படுகிறது.