டொனால்டு ட்ரம்ப், எலான் மஸ்க் எக்ஸ் தளம்
உலகம்

தினம் ஒருவருக்கு ரூ.8 கோடி.. ட்ரம்புக்கு ஆதரவாக புதிய அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்!

டொனால்டு ட்ரம்ப்வை வெற்றிபெற வைக்கும் முயற்சியில் அமெரிக்க மக்களிடம் புதிய அறிவிப்பை உலகப் பணக்காரரான எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

Prakash J

அமெரிக்காவில் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், இன்னும் 15 நாட்களே (நவ.5) உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸும் களத்தில் உள்ளனர். ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன.

இந்த நிலையில், உலக பணக்காரரும்ம் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமான எலான் மஸ்க், டொனால்டு ட்ரம்ப்வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அவரை, வரும் அதிபர் தேர்தலில் வெற்றிபெற வைப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவருடைய பிரசாரத்துக்காக அதிகளவில் நன்கொடைகளையும் வீசி வருகிறார். இந்த நிலையில் ட்ரம்ப்வை வெற்றிபெற வைக்கும் முயற்சியில் அமெரிக்க மக்களிடம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் (ரூ.8 கோடி) பரிசு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.

இதையும் படிக்க: ”நவ. 1 to19 ஏர் இந்தியா விமானங்களில் யாரும் பயணிக்க வேண்டாம்" எச்சரிக்கைவிடுத்த காலிஸ்தான் தீவிரவாதி

அதாவது, டொனால்டு ட்ரம்புக்கு குறைந்த வாக்கு வங்கி இருக்கும் மாகாணங்களில் வாக்காளர்களை ஒருங்கிணைத்து, பதிவுசெய்வது, அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்ய அரசியல் நடவடிக்கை அமைப்பு [பிஏசி] என்ற ஒன்றை எலான் மஸ்க் இணையம்மூலம் செயல்படுத்தி வருகிறார். அதில், ’முதல் மற்றும் இரண்டாவது சட்டத் திருத்தங்கள் பேச்சு சுதந்திரம் மற்றும் ஆயுதம் ஏந்துவதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. இதில் கையெழுத்திடுவதன் மூலம், முதல் மற்றும் இரண்டாவது சட்ட திருத்தங்களுக்கு எனது ஆதரவை உறுதியளிக்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எலான் மஸ்க்

இதன்படி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அதன்படி, இந்தப் படிவத்தில் கையெழுத்திடும் நபர்களில் தேர்தல் நடக்கும் நவம்பர் 5 வரை தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதன்படி, பென்சில்வேனியாவில் ட்ரம்புக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், முதல் நபராக ஜான் டிரெஹர் என்பவருக்கு ஒரு மில்லியன் டாலருக்கான காசோலையை வழங்கினார். இதற்கிடையே எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அமெரிக்க சட்டப்படி இதுபோன்ற செயலில் இறங்கியிருகும் எலான் மஸ்க்கிற்கு எதிராக நடவடிக்கை பாயும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

முன்னதாக ட்ரம்ப், ”நான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ அளிப்பேன்” என்று அறிவித்திருந்தார். அவர் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், ”நான் சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்” என தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கணவரின் நீண்ட ஆயுளுக்கு விரதம்.. முடித்தபின்பு மனைவி வைத்த ட்விஸ்ட்.. உபியில் அரங்கேறிய சோகம்!