எலான் மஸ்க் எக்ஸ் தளம்
உலகம்

’ஒரே அசிங்கமா போச்சு குமாரு..’ அபராத தொகையை வேறு அக்கவுண்ட்டுக்கு மாற்றி அனுப்பிய எலான் மஸ்க்!

Prakash J

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் முதல் இடத்தில் உள்ள எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குநராக உள்ளார். மேலும், எக்ஸ் தளத்தின் உரிமையாளராகவும் உள்ளார். எக்ஸ் தளத்தை உலகில் உள்ள பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், எக்ஸ் தளத்தின் கட்டுப்பாடுகள் குறித்து அவ்வப்போது புதிய அறிவிப்புகளையும் எலான் மஸ்க் வெளியிடுவார்.

இந்த நிலையில், பிரேசில் தேர்தலின்போது எக்ஸ் தளத்தில் முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகள் அனுமதியின்றி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும், இதனால் கட்டுப்பாடுகள் இன்றி எக்ஸ் தளம் செயல்பட்டு வருவதாகவும், பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கான பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த எலான் மஸ்க், பிரேசிலில் இருந்த அலுவலகத்தை மூடியதுடன், அங்கிருந்த ஊழியர்களையும் பணியிலிருந்து நீக்கினார். இருப்பினும், ”எக்ஸ் தள சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும்” என அறிவித்திருந்தார். ஆனால், நீதிமன்ற உத்தரவை எலான் மஸ்க் ஏற்க மறுத்த நிலையில், பிரேசிலில் எக்ஸ் தளத்துக்குத் தடைவிதித்து நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் உத்தரவிட்டார். மேலும், இந்த தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 43 கோடி) அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையும் படிக்க: சிலமணி நேரத்தில் 600 பேர் கொன்றுகுவிப்பு.. ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகள் அட்டூழியம்! #ViralVideo

இந்நிலையில் அந்த உத்தரவுப்படி தற்போது அபாரதத் தொகை செலுத்தியுள்ள எலான் மஸ்க், மாபெரும் தவறு ஒன்றை செய்துள்ளார். அதாவது, நீதிமன்றம் செலுத்தச் சொன்ன வங்கிற்கு, அந்தத் தொகையைச் செலுத்தாமல், வேறொரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பிரேசிலில் எக்ஸ் தளத்தின் மீதான தடையை நீக்குவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எக்ஸ் தளம் அபார பணத்தைத் தவறாக அனுப்பியதை உறுதிசெய்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், மீண்டும் பணத்தைச் சரியான கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

உலகில் பல பிரச்னைகளையும் சர்வசாதாரணமாக கையாளும் எலான் மஸ்க், இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டாரே என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ஈரான் மீது போர்| ஜோ பைடன், ட்ரம்ப் ஒரேநேரத்தில் ஆதரவு! அமைதி காக்கும் இஸ்ரேல்.. அடுத்து என்ன?