கமலா ஹாரிஸ், எலான் மஸ்க், டொனால்டு ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

”கமலா ஹாரிஸ் ஜெயிச்சா அமெரிக்கா அவ்ளோ தான்”|எலான் மஸ்க் உடனான உரையாடலில் ட்ரம்ப் காட்டமான விமர்சனம்!

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக டொனால்டு ட்ரம்பிடம் கேள்வி எழுப்பிய எலான் மஸ்க்கிடம், கமலா ஹாரிஸ் குறித்து கடுமையாகச் சாடினார்.

Prakash J

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். அதேநேரத்தில் ஜனநாயக கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்டவற்றால் கடும் விமர்சனத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவரே அதிபர் தேர்தலிலிருந்தே விலகினார்.

இதையடுத்து, துணை அதிபரான கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழியப்பட்டார். பின்னர் அவரே, ஜனநாயக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தற்போதைய கருத்துக்கணிப்புகள்படி, சில மாகாணங்களில் டொனால்டு ட்ரம்பைவிட கமலா ஹாரீஸ் முன்னிலையில் உள்ளார்.

இந்த நிலையில், டொனால்டு ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்திற்காக, நிதி தந்த பில்லியனர் தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், சமீபத்தில் ட்ரம்பை பேட்டி கண்டார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின்போது, ​​கடந்த மாதம் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து இருவரும் நீண்டநேரம் பேசினர்.

இந்தப் பேட்டியில் ட்ரம்ப் பேசிய சில விஷயங்கள் பெரிதும் கவனம் ஈர்த்தன. அதாவது, பென்சில்வேனியாவில் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முக்கியக் காரணம், அகதிகள் மீள் குடியேற்ற நிலைப்பாடுதான். நான் என்னவெல்லாம் செய்தேனோ, அவற்றை எல்லாம் செய்துகொண்டிருப்பதாக கமலா ஹாரிஸ் பொய்யான தகவல்களை பகிர்ந்துவருகிறார்” என கமலா ஹாரிஸை கடுமையாகச் சாடினார்.

இதையும் படிக்க: மயில் கறி சமைப்பது எப்படி?’ - வீடியோ வெளியிட்ட தெலங்கானா யூடியூபர் மீது வழக்குப்பதிவு!

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது, நமக்கு சரியான அதிபர் இல்லை. கமலா ஹாரிஸ் இதைவிட மோசமாக இருப்பார். சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த தாராளவாதி அவர். சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா நகரத்தை அழித்துவிட்டார். எனவே, கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், நமது நாட்டையும் அழித்துவிடுவார்.

சட்டவிரோதமாக ஊடுருபவர்களை கமலா ஹாரிஸ் அனுமதிக்கிறார். நாம் நினைப்பதைவிட இது அதிகமாக உள்ளது. சட்டவிரோத அகதிகள் இடம்பெயர்வு என்பது உலகின் பல்வேறு நாடுகளில் அதிகரித்து விட்டது. ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் 50 முதல் 60 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

ஜோ பைடன் ஒரு மோசமான அமெரிக்க அதிபர். இப்படி ஒரு நபரை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. ஏனெனில் ஈரான் - இஸ்ரேல் சர்ச்சை, ஆப்கானிஸ்தான் விவகாரம் ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை” என அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 5.30 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த நேர்காணல் தாமதமாகத் தொடங்கியது. யூசர்கள் ஸ்பேசில் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது. DDOS எனப்படும் சைபர் அட்டாக் நடைபெற்று இருப்பதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டினார். அதாவது, இன்டர்நெட் டிராபிக் வழியாக சர்வரில் மொத்தமாக புகுந்து பிற யூசர்களை இணையவிடாமல் முடக்கும் ஒருவகையிலான சைபர் தாக்குதல் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: 'அமெரிக்காவின் சதியே காரணம்' | குற்றஞ்சாட்டிய ஷேக் ஹசீனா.. மறுத்த மகன்.. வங்கதேசத்தில் நடப்பது என்ன?