எலான் மஸ்க் எக்ஸ் தளம்
உலகம்

ட்ரம்ப் மீதான கொலை முயற்சி குறித்த சர்ச்சை பதிவு... எழுந்த எதிர்ப்பு... பணிந்த எலான் மஸ்க்!

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், அதுகுறித்து சர்ச்சைக்குரிய வகையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தற்போது அதை நீக்கியுள்ளார்.

Prakash J

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸ் உள்ளார். ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்துக்குப் பின்னர் கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன. இதற்கிடையே இரு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரம்ப்

இந்த நிலையில், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ஃப் கிளப்பில், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரை குறிவைத்து கிளப்பிற்கு வெளியே இருந்து ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க; 27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா.. புதிய அலை உருவாக வாய்ப்பு.. அறிகுறிகள் என்ன?

இரண்டு மாதங்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாகாணத்தில் அவர் பரப்புரையில் ஈடுபட்டபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது, ட்ரம்ப் ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

குறிப்பாக, ட்ரம்பின் ஆதரவாளராக கருதப்படுபவரும், எக்ஸ் பக்கத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ‘ஜோ பைடன் (அமெரிக்க அதிபர்), கமலா ஹாரிஸ் (துணை அதிபர் மற்றும் அதிபர் வேட்பாளர்) ஆகியோரை கொல்ல யாரும் முயற்சிகூட செய்யவில்லை’ எனப் பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அதற்கு எதிராகக் கண்டனங்களும் குவிந்தன.

எலான் மஸ்க்கின் நீக்கப்பட்ட பதிவு

இதையடுத்து, “நாட்டில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை. இந்த சம்பவம் மேலும் நடக்காமல் இருக்க நாம் அனைவரும் நம் பங்கைச் செய்ய வேண்டும். வன்முறையை மட்டுமே கண்டிக்க வேண்டும். ஒருபோதும் ஊக்குவிக்கவோ அல்லது கேலி செய்யவோ கூடாது. இந்த பதிவு முற்றிலும் பொறுப்பற்றது” என வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அந்தப் பதிவை நீக்கிய எலான் மஸ்க், இதனை தான் வேடிக்கையாக சொன்னதாக தெரிவித்துள்ளார். அத்துடன், “நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம் என்னவென்றால், சிலரிடம் நான் ஏதாவது சொல்லி அதற்கு அவர்கள் சிரிப்பதனால் மட்டுமே, அதை நான் 𝕏 இல் போடலாம் என்றோ அது அனைவருக்கும் நகைச்சுவையாக இருக்கும் என்றோ அர்த்தமல்ல” என்றுள்ளார்.

இதையும் படிக்க; அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. சந்திக்க விருப்பம் தெரிவித்த ட்ரம்ப்!