உலகம்

3ஆம் உலகப்போர் வரும் என்ற அச்சத்தில் ட்விட்டரை வாங்கவில்லை - எலான் மஸ்க் புது விளக்கம்!

3ஆம் உலகப்போர் வரும் என்ற அச்சத்தில் ட்விட்டரை வாங்கவில்லை - எலான் மஸ்க் புது விளக்கம்!

ச. முத்துகிருஷ்ணன்

முன்னதாக சில மாதங்களுக்கு முன் 44 பில்லியன் டாலருக்கு (34 ஆயிரம் கோடி ரூபாய்) ட்விட்டரின் பங்குகளை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டிருந்தார். பின்னர் குறுகிய கால இடைவெளிக்குப் பின் ட்விட்டரில் போலி பயனர் கணக்குகள் குறித்த தகவல்களை அளிக்க தவறியதால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் உள்ள டெலாவேர் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்தது. ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழியை எலான் மஸ்க் நிறைவேற்ற உத்தரவிடுமாறு ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. அவ்வாறு நிறைவேற்ற இயலாவிட்டால் ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை ( இந்திய மதிப்பில் 8 ஆயிரம் கோடி ரூபாய்) முறிவு கட்டணமாக (Break-up Charge) அளிக்க உத்தரவிடவும் ட்விட்டர் கோரிக்கை வைத்துள்ளது.

நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 3ஆம் உலகப்போர் வரும் என்ற அச்சத்தில் ட்விட்டரை வாங்கவில்லை என எலான் மஸ்க் தெரிவித்ததாக புது தகவல் ஒன்று தீயாய் பரவியது. தனது வங்கியாளர் மோர்கன் ஸ்டான்லி என்பவருக்கு எலான் மஸ்க் அனுப்பிய குறுஞ்செய்தியில், “சில நாட்கள் மட்டும் வேகத்தைக் குறைப்போம். நாளை புடினின் பேச்சு மிகவும் முக்கியமானது. மூன்றாம் உலகப் போருக்குச் சென்றால் ட்விட்டரை வாங்குவதில் அர்த்தமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் எலான் மஸ்க்.

வலைதளங்களில் வைரலான இந்த தகவல் நீதிமன்றத்திலும் எதிரொலித்தது. இதற்கு எலான் மஸ்கின் வழக்கறிஞர், “யுத்தம் போன்ற சூழல் ஏற்பட்டால் எந்தவொரு தொழில்முனைவோரும் அச்சமடைவார்கள்.” என்று வாதிட்டார். இதையடுத்த மோர்கன் ஸ்டான்லி - எலான் மஸ்க் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் முழுவதையும் ஆவணமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.