அனுர குமார திஸநாயக pt web
உலகம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் | தமிழ்மக்களின் வாக்குகள் யாருக்கு? கட்சிகளின் கணக்கும் கடந்தகால பாதையும்!

2009க்குப் பின் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அதிக தொகை கட்சிகளும் சுயேச்சைகளும் போட்டியிடும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் களம் இது.

PT WEB

- நிலாந்தன் (இலங்கை)

நம் பக்கத்து நாடான இலங்கையின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல், நாளை நடைபெறுகிறது. அதிபர் அனுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சித்தலைவராக இருந்த சஜித் பிரேமதாச, மற்றும் முன்னாள் இடைக்கால அதிபர் ரணிலின் புதிய சனநாயக முன்னணி, ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி உள்ளிட்ட சிங்களக் கட்சிகளும் எஸ்.ஸ்ரீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் களத்தில் நிற்கின்றன. இந்தத் தேர்தலை இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் எப்படி அணுக வேண்டும்?

தனக்குள்ளேயே அணிகளாக தமிழரசுக் கட்சி

2009க்குப் பின் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பல கட்சிகளும் சுயேச்சைகளும் போட்டியிலும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் களம் இது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஒன்றுபட தவறியதன் விளைவாக ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடம், அவநம்பிக்கை,சலிப்பு போன்ற காரணங்களின் விளைவாக அதிக எண்ணிக்கையான சுயேச்சைகள் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

2009ஆம் ஆண்டு தமிழ் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் 22 இடங்களாக இருந்தது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டணி, பலமாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்த பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி பங்காளிக் கட்சிகளை மெல்லமெல்ல வெட்டிவிட்டது. விளைவாக,கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் 13ஆகக் குறைந்தது. கூட்டமைப்பின் ஏகபோகம் உடைந்தது. முடிவில் தமிழரசுக் கட்சியும் இப்போது நீதிமன்றத்தில் நிற்கிறது. அது தனக்குள்ளேயே அணிகளை கொண்ட ஒரு கட்சியாக மாறிவிட்டது.

மாற்றத்தின் அலை அல்லது ’அநுர அலை’

இம்முறை அக்கட்சிக்குள் இருந்து ஓர் அணி உடைந்து வெளியேறி சுயேச்சையாகப் போட்டியிடுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பங்காளிக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கூட்டை உருவாக்கிப் போட்டியிடுகின்றன. இவ்வாறு தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஐக்கியமின்றி வாக்குகளை சிதறடிக்கும் ஒரு போக்கு அதிகமாகக் காணப்படும் இத்தேர்தல் களத்தில், தென்னிலங்கையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி அநுர குமாரா, அங்கே மாற்றத்தின் அலை ஒன்றுக்குத் தலைமை தாங்குவதாக ஒரு தோற்றம் எழுந்திருக்கிறது. அந்த மாற்றத்தின் அலை அல்லது ’அநுர அலை’ தமிழ் மக்கள் மத்தியிலும் பரவி வருகிறது.

அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில விரிவுரையாளர்களும் படித்தவர்களும் இணைந்து ஓர் ஊடகச் சந்திப்பை நடத்தி அநுர தலைமை தாங்கும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டிருந்தார்கள். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளின் தோல்வி காரணமாக தமிழ் மக்கள் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் அலையை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

எனினும், தமிழ்மக்கள் மத்தியில் உள்ள சிவில் அமைப்புகளும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் பலவும் மாற்றத்தின் அலை என்பது ஒரு மாயமான் என்று சுட்டிக்காட்டியுள்ளன. 1994இல், சந்திரிகா அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டபோது தமிழ்மக்கள் மத்தியில் அவர்குறித்து பலமான எதிர்பார்ப்பு எழுந்தது. அதன் விளைவாக புதிதாக சந்தைக்கு வருகின்ற சேலைகளுக்கு, ’சந்திரிகா சேலை’ என்று பெயர் வைக்கப்பட்டது. ’சந்திரிகா காப்பு’, ’சந்திரிகா கைப்பை’ என்று பெயர் கூறிப் பொருட்கள் விற்கப்பட்டன. அது போர்க்காலம். இப்போது மீண்டும் அநுர குமாரா ஓர் அலையை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் வாக்காளர்களில் ஒரு பகுதியினர் அந்த அலையினால் ஈர்க்கப்படலாம். என்ற பயம், பதற்றம் தமிழ்க் கட்சிகள் மத்தியில் உண்டு.

பிரம்மாண்டமான அநுரவின் கூட்டம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மாநகர சபை எல்லைக்குள் உள்ள ஒரு கரையோரக் கிராமத்தில், அதிபர் அநுர குமாரா பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். குறைந்தது 5,000 பேர் வரை கூடிய அந்தக் கூட்டத்தில், அவர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பிரகாசமான வாக்குறுதிகள் எதனையும் வழங்கவில்லை. ஆனால் அவர், மிக எளிமையாக நடந்துகொண்டார். அவருடைய வருகையையொட்டி பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை. ராணுவப் புலனாய்வாளர்கள் மாறுவேடத்தில் நடமாடினார்கள். சீருடையணிந்த படை வீரர்களை அப்பகுதியில் அதிகமாகக் காண முடியவில்லை. அதுவும் ஒரு மாற்றம்தான். அநுர குமாரா ஒரு காரில் வந்து இறங்கினார். வழக்கமாக, தலைவர்கள் பயணம் செய்யும் சொகுசு வாகனத்தில் அவர் வரவில்லை. அது ஒரு கத்தோலிக்கக் கிராமம். அவரை வரவேற்ற முதிய கத்தோலிக்க அருட் சகோதரி ஒருவர் அவருடைய இரண்டு கன்னங்களையும் அன்போடு தடவி ஆசீர்வதித்தார். அவ்வாறு எல்லோரும் நெருங்கிச்சென்று தொடக்கூடிய ஒரு தலைவராக அவர் காணப்படுகிறார். இதுபோன்ற மாற்றங்கள் தமிழ்ப் பகுதிகளில் அநுரவுக்கு உள்ள கவர்ச்சியை அதிகப்படுத்தும்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் களத்தில் யாழ்ப்பாணத்தில், இதுவரை ஒழுங்கு செய்யப்பட்ட எல்லாக் கூட்டங்களையும்விட பிரமாண்டமானது அநுரவின் கூட்டம்தான். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க்கட்சிகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மிகப்பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்தவில்லை. ஆனால் அநுரவின் கூட்டத்துக்கு சிங்களப் பகுதிகளில் இருந்து பேருந்துகளில் ஆதரவாளர்கள் கொண்டுவரப்பட்டார்கள் என்று தமிழரசுக் கட்சியை சேர்ந்த சுமந்திரன் விமர்சித்துள்ளார். ஆட்தொகையைக் காட்டுவதற்காக, அரசாங்கம், தென்னிலங்கையில் இருந்து ஆதரவாளர்களைக் கொண்டுவந்து வடக்கில் கூட்டம் நடத்தியிருப்பதாக தமிழ்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

தமிழ் மக்கள் என்ன முடிவெடுக்க வேண்டும்?

ஒருபுறம் ஐக்கியப்படாத தமிழ்த் தேசியக் கட்சிகள். இன்னொருபுறம் அநுர அலையின் ஈர்ப்பு. இந்த இரண்டுக்கும் இடையில் தமிழ்மக்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. அநுர குமாரா எளிமையாக நடக்கிறார். மேட்டுக்குடித் தலைவர்கள் ஏற்படுத்திய பாரம்பரியங்களை மாற்றுகிறார். ஆனால் தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் அடிப்படை விஷயத்தில் அவருடைய கட்சி மாற்றத்தைக் காட்டவில்லை.

அதிபர் தேர்தலுக்கு முன்னரே அநுர குமாரா, அசோசியேட்டட் பிரஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், ”போர் குற்றங்களுக்காக படையினரைத் தண்டிக்கத் தயாரில்லை” என்று கூறிவிட்டார். அண்மையில் ஜேவிபியின் மூத்த தலைவராகிய ரில்வின் சில்வா, ”தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியமில்லை” என்று கூறியிருந்தார். மற்றொரு முக்கியஸ்தர், “பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கமுடியாது” என்று கூறியிருந்தார். ஜேவிபி இனப்பிரச்னையை ஒரு மனிதாபிமானப் பிரச்னையாகத்தான் அணுகுகிறது.அதை அதற்குரிய ஆழமான அரசியல் பரிமாணங்களோடு அக்கட்சி புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இலங்கைத்தீவின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றி தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் சமஸ்டி கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த ஜேவிபி தயாரில்லை.

மீன் கரைந்தாலும் சட்டிக்குள்ளாவது இருக்கட்டும்

அநுர குமாரா மேலோட்டமாகக் காட்டும் மாற்றங்களை நம்பி தமிழ்மக்கள் ஏமாற முடியாது. போர் முடிந்தபின்னரும், கடந்த 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சுமார் 1 கிலோ மீட்டர் பாதையை அண்மையில் அரசாங்கம் திறந்துவைத்தது. அதன்மூலம் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 2009க்குப் பின்னரும்,15 ஆண்டுகளாக பல பாதைகள் இன்றுவரை திறக்கப்படவில்லை. தமிழ்ப் பிரதேசங்களின் நுழைவாயில்களில் காணப்படும் படையினரின் சோதனைச் சாவடிகள் அகற்றப்படவில்லை. அநுர, அதிபர் தேர்தலில் படைத்தரப்பினரின் வாக்குகளை அதிகமாகப் பெற்றவர். எனவே அவரால் படைத்தரப்பை மீறி முடிவெடுக்க முடியாது.

34 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ஒரு கிலோமீட்டர் பாதையை அவர் திறந்ததைவைத்து அல்லது அவர் மேட்டுக்குடி அரசியல்வாதிகளை போலல்லாது எளிமையாக நடப்பதை வைத்து, தமிழ்மக்கள் அவருடைய கட்சிக்கு வாக்களிக்க முடியாது. மாறாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் சிதறிப்போய் இருந்தாலும் அவற்றில் ஏதாவது ஒன்றுத்குத்தான் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்மக்கள் அநுர குமாரா ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள், அங்கீகரித்துவிட்டார்கள் என்று உலகம் நம்பும். குறிப்பாக கிழக்கில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது பாதுகாக்க வேண்டும். எனவே தமிழ் மக்கள் மிகத் தெளிவாக முடிவெடுக்க வேண்டும். மாய மானாக வந்து நிற்கும் மாற்றத்தின் அலைக்குப்பின் மீது தமிழ்மக்கள் போக முடியாது. ஐக்கியம் இல்லையென்றாலும் ஏதாவது ஒரு தமிழ்த்தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும். மீன் கரைந்தாலும் சட்டிக்குள்ளாவது இருக்கட்டும்.