ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பிரான்ஸின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் 2 நாட்களாக மூடப்பட்டது.
பிரான்ஸ் செல்லும் மக்கள் அனைவரும் தவறாமல் பார்வையிடும் ஓர் இடம் பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரம். இந்தக் கோபுரத்தை பார்வையிட கடந்த மாதத்தில் இருந்து ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களும், முன்பதிவு செய்யாமல் நேரடியாக வந்த சுற்றுலாப் பயணிகளும் ஒரே நேரத்தில் ஈபிள் கோபுரத்தை பார்வையிட வந்ததால் கடந்த புதன்கிழமை அங்கு கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஈபிள் கோபுர ஊழியர்கள் திணறினர்.
ஆன்லைன் முன்பதிவு முறையே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இதனால் புதன்கிழமை பிற்பகலில் இருந்து ஈபிள் கோபுரத்தை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஈபிள் கோபுரத்தை பார்வையிட வேண்டுமென்ற ஆசையுடன் வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இன்று முதல் ஈபிள் கோபுரத்தை பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.