காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் அரசுக்கு எகிப்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த ராணுவத்தினர், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 150 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி உள்ளது. மேலும், பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசாவுக்கு மின்சாரம் வழங்கமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசா நகரத்தில் இருந்த மின் உற்பத்தி நிலையத்தில் எரிபொருள் முழுவதும் தீர்ந்ததன் காரணமாக நேற்றிலிருந்து காசா நகரத்தில் மின்சாரம் இல்லாத நிலையே உள்ளது.
இதுபோன்ற சூழல் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். எகிப்திற்கு ரஃபா எல்லை வழியாக செல்வதைத் தவிர காசா மக்களுக்கு வேறு பாதை இல்லை. பல்வேறு உலக நாடுகளும், அப்பாவி மக்கள் போரினால் பாதிக்கப்படக் கூடாது என்றும் மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளன.
இதன் காரணமாக ரஃபா பகுதியில் தாக்குதலை தவிர்க்கும்படி எகிப்து தெரிவித்துள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே நிலையை தாக்குதல் நடத்தி அடைக்க வேண்டாம் என எகிப்து கோரிக்கைவிடுத்துள்ளது. ஹமாஸின் உட்கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்படும்போது மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேலும் அறிவுறுத்தியிருந்தது.