economics nobel prize 2024 x page
உலகம்

2024 பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு | மூன்று வல்லுநர்களுக்கு அறிவிப்பு! எதற்காக கிடைத்தது தெரியுமா?

நடப்பாண்டுக்கான பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு இன்று மூன்று பொருளியல் வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

Prakash J

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பொருளாதாரத் துறையைத் தவிர, இதர துறைகளுக்குக் கடந்த வாரம் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூன்று வல்லுநர்களுக்கு இந்த வருடம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

நாடுகளின் செழுமைகளுக்கு இடையிலான வேறுபாடு குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நோபல் பரிசு வென்றதை கொண்டாட மறுத்த தென்கொரிய எழுத்தாளர்! வருத்தமான பின்னணி! உண்மையை உடைத்த தந்தை!

இவர்களின் தேர்வு குறித்து நோபல் குழு, "ஒரு நாட்டின் வளமைக்கு சமூக நிறுவனங்களின் முக்கியத்துவம் குறித்து மூன்று பொருளாதார வல்லுநர்களும் தங்களது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். சட்டத்தின் மோசமான ஆட்சியைக் கொண்ட சமூகங்கள் மற்றும் பொதுமக்களைச் சுரண்டும் நிறுவனங்கள் அந்தச் சமூகத்தில் வளர்ச்சியையோ, சிறந்த மாற்றத்தையோ உருவாக்காது. இது ஏன் என்பதை இப்பொருளாதார நிபுணர்களின் ஆராய்ச்சியில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது" என அறிவித்துள்ளது.

முன்னதாக, மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அடுத்து, இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃரி ஹிண்டன் ஆகியோருக்கும், வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, புரதத்தின் வடிவம் குறித்த ஆராய்ச்சிக்காக, டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டது. அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு, ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்கா | மூன்றாவது முறையாக முயற்சி.. ட்ரம்ப் பிரசாரத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்!