இயர்போன் வெடிப்பு எக்ஸ் தளம்
உலகம்

துருக்கி | வெடித்த இயர்போன்.. இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட காது கேளாமை.. நிறுவனம் சொன்ன அலட்சிய பதில்!

துருக்கியில் இயர்போன் வெடித்துச் சிதறியதன் மூலம் பெண் ஒருவருக்கு காது கேளாமை ஏற்பட்டுள்ளது.

Prakash J

நாளுக்குநாள் அறிமுகமாகும் புதிய மின்சாதனப் பொருட்கள், மக்களிடம் வருகையைப் பெற்றுவருகிறது. இதை வாங்கிப் பயன்படுத்தி மகிழ்ச்சியை அடையும் நேரத்தில், அதுமூலமாக சில நேரங்களில் ஆபத்துகள் நேருவதை அவர்கள் உணர்வதில்லை. அப்படியான ஒரு நிகழ்வுதான் துருக்கியில் நடைபெற்றுள்ளது.

துருக்கியைச் சேர்ந்த பெண் ஒருவர் பயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி பட்ஸ் எஃப். இ (Samsung Galaxy Buds FE) இயர்போன் வெடித்துச் சிதறியுள்ளது. இதுதொடர்பாக நபர் ஒருவர் வெளியிட்டிருந்த பதிவில், சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்டிரா மொபைலை பயன்படுத்தி தாம் பயன்படுத்தி வருவதாகவும், அத்துடன் சேர்ந்து பயன்படுத்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ் எஃப்.இ இயர்போனை வாங்கியதாகவும், மேலும் இயர்பட்கள் வந்தபோது அதில் 36% சார்ஜ் இருந்ததாகவும், பின்னர் அதை தன்னுடைய பெண் தோழி கேட்டதால் கொடுத்ததாகவும், அதை வாங்கிய பயன்படுத்திய கொஞ்ச நேரத்தில் அது வெடித்துச் சிதறியதாகவும், இதன் பாதிப்பால் அவருக்கு நிரந்தர காது கேளாமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், இதுதொடர்பாக நிறுவனத்திடம் விளக்கியதுடன், சேதமடைந்த இயர்பட்ஸையும் காண்பித்துள்ளார். அதைப் பார்த்த நிறுவனத்தினர் மன்னிப்பு கேட்டதாகவும், ஆனால் அதற்குப் பிறகுதான் பிரச்னை நிகழ்ந்ததாகவும் அந்த நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதாவது, 2 நாள் கழித்து அந்த நிறுவனத்திற்கு அவர் சென்றபோது, ‘இயர்போன் வெடிக்கவில்லை.. சிதைந்து மட்டுமே இருக்கிறது’ எனச் சொல்லி அதற்குப் பதிலாக புதிய இயர்போன்களை தருவதாகக் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: மும்பை|'மேன்ஹோல்' விபத்து.. 45வயது பெண் உயிரிழப்பு.. பின்னணியில் திருட்டுச் சம்பவங்கள்.. பகீர் தகவல்

ஆனால் அதற்கு அந்த ஆண் நண்பர், ’என் பெண் தோழி காது கேட்கும் தன்மையையே இழந்துள்ளார். ஆனால், நீங்களோ வெறும் இயர்போனை மட்டும் தருவதாகச் சொல்வதை ஏற்க முடியவில்லை’ என முறையிட்டுள்ளார். ஆனால் நிறுவனமோ, ’வேண்டும் என்றால் இதை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் கிளம்புங்கள்.. வழக்கு தொடரவேண்டும் என்றால் அது உங்கள் இஷ்டம்’ என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிய நிலையில், அவருக்கு இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்தால் உதவுங்கள்” எனக் கேட்டு பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து ஆவணங்களும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுதான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்த சம்பவத்தை உறுதி செய்ய முடியவில்லை என்றே அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

அதேநேரத்தில் சாம்சங் தொடர்பான மின்சாதன பொருட்கள் சமீபகாலமாக வெடித்துச் சிதறுவதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2016இல் கேலக்ஸி நோட் 7 செல்போன்கள் வெடித்துச் சிதறியதாகவும், அதன்பேரில் அந்த நிறுவனம் மில்லியன் கணக்கான சாதனங்களை திரும்பப் பெற்றதாகவும் செய்திகள் வெளியானதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பிராண்டின் நற்பெயரைக் களங்கப்படுத்தியதுடன், கேலக்ஸி நோட் 7 மாடலை முழுமையாகவும் நிறுத்த வழிவகுத்தது என தெரிவித்துள்ளது. அடுத்து அந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தவிர, வாஷிங் மெஷின்களும் வெடித்ததாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2015 மற்றும் 201 க்கு இடையில், சாம்சங்கின் டாப்-லோடிங் வாஷிங் மெஷின்கள் வெடித்துச் சிதறியதாக செய்திகள் வந்ததையடுத்து, அமெரிக்காவில் மட்டும் 2.8 மில்லியன் அந்த நிறுவனத்தின் வாஷிங் மெஷின்கள் திரும்பப் பெறப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: என்னது தூங்குறதுக்கு லட்சம் லட்சமா பரிசா! ஸ்லீப் சாம்பியன் போட்டியில் 9 லட்சம் வென்ற பெங்களூரு பெண்!