உலகம்

’எதிர்பார்த்தது தண்ணீர், கிடைத்தது மாம்பழம்’: இந்திய இளைஞருக்கு துபாயில் சிறை!

’எதிர்பார்த்தது தண்ணீர், கிடைத்தது மாம்பழம்’: இந்திய இளைஞருக்கு துபாயில் சிறை!

webteam

துபாய் விமான நிலையத்தில் தண்ணீர் குடிப்பதற்காக பயணிகள் லக்கேஜை திறந்த இந்திய ஊழியர் மாம்பழங்களைத் திருடியதற்காக கைது செய்யப்பட்டார். 

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று, துபாய் விமான நிலையம். இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் 27 வயது இந்தியர் ஒருவர் பணியாற்றி வந்தார். ஒரு நாள் இவருக்கு கடுமையான தண்ணீர்த் தாகம். பக்கத்தில் தண்ணீர் இல்லை. அப்போது கன்வேயர் பெல்ட்டில் பயணிகளின் லக்கேஜ்கள் சென்று கொண்டிருந்தன. அதில் சென்ற ஒரு பாக்ஸை திறந்து தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தார். இல்லை. ஆனால், மாம்பழங்கள் இருந்தன. அதில் இருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்துத் தின்றார். பிறகு வழக்கம் போல அவர் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார். 

இந்த சம்பவம் நடந்தது 2017 ஆம் ஆண்டு. இந்நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது. பின்னர் அவர் தங்கியிருந்த அறையில் திருட்டுப் பொருட்கள் ஏதும் இருக்கிறதா என தேடினர். ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிசிடிவி கேமராவை பரிசோதித்தபோது இந்திய விமானம் ஒன்றின்  பயணிகள் லக்கேஜை திறந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

அப்போது கைது செய்யப்பட்ட இந்தியர் தரப்பில், தாகத்தால் 6 திர்ஹாம் மதிப்புள்ள இரண்டு மாம்பழங்கள் மட்டுமே எடுத்ததாகக் கூறப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 23 ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது.