உக்ரைன் நடத்திய தாக்குதல் pt web
உலகம்

ரஷ்யாவுக்கு ஷாக்! மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்!

Angeshwar G

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்சேதம் பொருள் சேதங்கள் ஏற்படுள்ளன. உலக நாடுகள் பலவும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை (10/09/24) அதிகாலையில், மாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் பிற எட்டு பகுதிகளின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

மாஸ்கோ நகரில் உள்ள குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலில், 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், 12 பேர் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆளில்லா விமானங்கள் உட்பட 124 ட்ரோன்கள் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் காரணமாக இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாக்குதலை தொடர்ந்துகுடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள் அவசர, அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக மாஸ்கோ ஆளுநர் ஆண்டிரி வோரோப்யோவ் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் ரஷ்யப் பகுதிகளில் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்றாகும்.

உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலால் மாஸ்கோ நகரில் விமானசேவைகள் பாதிக்கப்பட்டன. மூன்று விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாஸ்கோ நகர் வான்வெளியில் குறைந்த அளவிலான விமானங்களே காணப்பட்டது செயலிமூலம் தெரியவந்துள்ளது. உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.